பெங்களூரு அணிக்கு எதிராக சொல்லி அடித்த டெல்லி

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 26வது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். இந்த இணை, 5.1 ஓவரில் 52 ரன்கள் குவித்திருந்த நிலையில் லுங்கி நிகிடி வீசிய பந்தில் விராட் கோஹ்லி (19 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 18 ரன்னில் வீழ்ந்தார்.

அதுவரை சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பில் சால்ட், 11வது ஓவரில் (38 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி, 63 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரஜத் படிதார் (8 ரன்), டிம் டேவிட் (26 ரன்), ரொமாரியோ ஷெபர்ட் (1 ரன்), க்ருணால் பாண்ட்யா (12 ரன்), ஜிதேஷ் சர்மா (14 ரன்) சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அதனால், 20 ஓவரில் பெங்களூரு அணி, 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. அதன் பின், 176 ரன் இலக்குடன் டெல்லி அணியின் பதும் நிஸங்கா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். நிஸங்கா, முதல் ஓவரில் 1 ரன்னுக்கு அவுட்டானார்.

அடுத்து வந்த கருண் நாயர் 5 ரன்னிலும், சமீர் ரிஸ்வி 2 ரன்னிலும் வீழ்ந்தனர். இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அட்டகாசமாக ஆடி ரன் குவித்தனர். இவர்கள், 44 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய நிலையில் ராகுல் (34 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி, 57 ரன்) அவுட்டானார். பின்னர் வந்த கேப்டன் அக்சர் படேல் (26 ரன்) ரிடையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். 19.5 ஓவரில் டெல்லி, 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (47 பந்து, 1 சிக்சர், 4 பவுண்டரி, 60 ரன்), டேவிட் மில்லர் (22 ரன்) களத்தில் இருந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்ட நாயகன்.

Related Stories: