சிஎஸ்கே அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி

ஐதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 27வது போட்டி, ஐதராபாத் நகரில் நேற்று நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஐதரபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்து வீசியது. அதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். துவக்கம் முதல் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இந்த இணை, 5.5 ஓவரில் 75 ரன்கள் விளாசி வலுவான நிலையில் இருந்தபோது, டிராவிஸ் ஹெட் 23 ரன்னில், முகேஷ் சவுத்ரி பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த கேப்டன் இஷான் கிஷண் அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். இதற்கிடையே 15 பந்துகளில் அரை சதம் விளாசி தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா (22 பந்து, 4 சிக்சர், 6 பவுண்டரி, 59 ரன்), ஜேமி ஓவர்டன் வீசிய 8வது ஓவரில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, ஓவர்டன் வீசிய 11வது ஓவரில் அனிகேத் வர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டி (12 ரன்), ஓவர்டன் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தபோதும், மறுமுனையில் பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்த ஹென்றிச் கிளாசன், 32 பந்துகளில் அரை சதம் விளாசி ரன் உயர உதவினார். இருப்பினும், அன்சுல் கம்போஜ் வீசிய 18வது ஓவரில் கிளாசன் (39 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி, 59 ரன்) கிளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார். குர்ஜப்நீத் சிங் வீசிய அடுத்த ஓவரில் சலீல் அரோரா (13 ரன்) அவுட்டானர். அன்சுல் கம்போஜ் வீசிய கடைசி ஓவரில் சிவாங் குமார் (12 ரன்) ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் லியாம் லிவிங்ஸ்டோன் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது. 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக மேட் ஷார்ட் 34 ரன், ஆயுஷ் மாத்ரே 30 ரன் எடுத்தனர். ஐதராபாத் பந்து வீச்சில் இஷான் மலிங்கா 3 விக்கெட், நிதிஷ் குமார் 2 விக்கெட், பிரபுல் ஹிஞ்சே, சாகிப், ஷிவாங் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

* அபிஷேக் அதிரடி அரைசத சரவெடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 15 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளாசப்பட்ட அதிவேக அரைசதமாக அது அமைந்தது. இந்த சாதனைப் பட்டியலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியும் முதலிடத்தில் உள்ளார். அவர், கடந்த மார்ச் 30ல் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். ஒட்டு மொத்த ஐபிஎல் வரலாற்றில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 50 ரன்கள் விளாசி முதலிடத்தில் தொடர்கிறார். கடந்த 2023ல் அவர் அந்த சாதனையை படைத்தார். கே.எல்.ராகுல், பேட் கம்மின்ஸ், ரொமாரியோ ஷெபர்ட் ஆகியோர் 14 பந்துகளில் 50 ரன் விளாசி 2ம் இடத்தில் உள்ளனர்.

Related Stories: