ஹாம்பர்க்: ஹாம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் நேற்று, இந்திய வீரர் வீரர் சோத்ரானி, ஜெர்மனியை சேர்ந்த முன்னணி வீரர் ரபேல் காந்ராவை நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் வீர் சோத்ரானி, ஜெர்மனியை சேர்ந்த 8ம் நிலை வீரர் ரபேல் காந்த்ரா உடன் மோதினார்.
போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சோத்ரானி, முதல் செட்டை 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், அடுத்த இரு செட்களையும் 11-7, 11-7 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 3-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில் இந்திய வீரர் அபய், இங்கிலாந்து வீரர் சாம் டாட் உடன் மோதி தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீரர் ரமித் தாண்டன் ஹங்கேரியின் பலாஸ் ஃபர்காசிடம் வீழ்ந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவை சேர்ந்த உலகின் 10ம் நிலை வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா நியூசிலாந்தின் ஜோல்லி கிங்கிடம் தோல்வியை தழுவினார்.
