செந்துறை வட்டத்தில் 515 பயனாளிகளுக்கு ரூ.2.43 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

அரியலூர்,பிப்.23: செந்துறை வட்டத்தில் 515 பயனாளிகளுக்கு ரூ.2.43 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரத்னா வழங்கினார். ­அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு வரன்முறை படுத்தும் திட்டத்தின்கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 477 பேருக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 38 பேர்களுக்கு ரூ.4 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை மற்றும் இதர தொகைக்கான காசோலைகளையும் என மொத்தம் 515 பேருக்கு ரூ.2 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ரத்னா வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண் பணி செய்யும் விவசாய பெருங்குடி மக்களுக்காக முதலமைச்சர் பல்வேறு வகையான வளர்ச்சித்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

அதன்அடிப்படையில், விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீரை பெருக்கும் வகையில் முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், விவசாய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் வேளாண் பெருங்குடி மக்கள் தொடர்ந்து, வேளாண் பணிகளில் ஈடுபடும் வகையில் நிலுவையில் உள்ள பயிர் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13.2.2021 அன்று பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உள்ள 30,542 விவசாயிகளுக்கு ரூ.224.98 கோடி விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் (பொ) பாலாஜி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: