திருவனந்தபுரம்: கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. தொடர்ந்து 10 வருடங்களாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து விட்டதால் இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றியே தீருவது என்ற முனைப்புடன் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்பே காங்கிரசில் யார் முதல்வர் என்ற மோதல் ஏற்படத் தொடங்கியது.
முதல்வர் பதவி மீது மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், எம்பிக்களான கே.சி வேணுகோபால், சுதாகரன் ஆகியோருக்கு கண் இருந்தது. இதனால் சுதாகரன், கே.சி. வேணுகோபால் ஆகியோருக்கு செக் வைப்பதற்காக சட்டப்பேரவை தேர்தலில் எம்பிக்கள் யாரும் போட்டியிடக் கூடாது என்று காங்கிரசில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நான் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவேன் என்று சுதாகரன் வெளிப்படையாக அறிவித்தார்.
இது காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சுதாகரன் மூத்த தலைவர் என்பதால் அவரை சரிக்கட்டுவதற்கு ராகுல் காந்தி வரை தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. சுதாகரனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த சாக்கில் தனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கே.சி. வேணுகோபால் கருதியிருந்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதில் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டினார். இதனால் இந்தத் தேர்தலில் எம்பிக்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை. இதன் பிறகு இந்த விவகாரம் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் முதல்வராக வருவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன் இம்மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஷியாஸ் கூறியது காங்கிரசில் மீண்டும் புயலை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவரான சதீசன் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவருக்காகத் தான் ஷியாஸ் குரல் கொடுத்தார். இதற்கு ரமேஷ் சென்னித்தலா, மாநில தலைவர் சன்னி ஜோசப், முரளீதரன் உள்பட சில காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே கே.சி. வேணுகோபால் தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று சுதாகரனும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இது காங்கிரசில் அடுத்த சூறாவளியை ஏற்படுத்தியது. நமக்குத்தான் முதல்வர் பதவி என்ற கனவில் இருந்த ரமேஷ் சென்னிதலா மற்றும் சதீசனுக்கு சுதாகரனின் இந்தக் கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரமேஷ் சென்னித்தலா நேற்று அவசர அவசரமாக டெல்லிக்கு விரைந்து சென்று சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.
தனக்குத்தான் முதல்வர் பதவி தரவேண்டும் என்று அவர் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. காங்கிரசில் முதல்வர் பதவிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது இக்கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே முதல்வர் பதவிக்கு தலைவர்கள் மோதிக்கொள்வது நல்லதல்ல என்றும், இது ஓட்டு போட்ட மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் கூறுகின்றனர். காங்கிரசில் முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள இந்த மோதலை இடதுசாரி கூட்டணி தலைவர்களும் கிண்டலடித்து வருகின்றனர்.
