தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: ஒன்றிய பாஜ அரசின் சதி முறியடிப்பு

* 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 298 வாக்குகள் மட்டுமே கிடைத்தது
* முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு நாடு முழுவதும் பரவியதால் ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்

புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதோடு இணைந்த மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த விவகாரத்தில் மோடி அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்ற வைத்த நெருப்பு நாடு முழுவதும் பரவி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளச் செய்து மசோதா தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி நாடாளு​மன்​றத்திலும், மாநில சட்டப்​பேர​வை​களிலும் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு வரும் மக்களவை தேர்தலில் தான் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த நிலையில் திடீரென ஏப்.16 (நேற்று முன்தினம்) முதல் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் மகளிர் இடஒதுக்​கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா, யூனியன் பிரதேசங்களில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஆகியவற்றை இணைத்து ஒரே மசோதாவாக மக்களவையில் ஒன்றிய அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026 ஆகிய​வற்றை ஒன்றிய சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் மக்களவை​யில் அறி​முகம் செய்​தார்.

யூனியன் பிரதேச சட்டங்​கள் (திருத்த) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்​சர் அமித் ஷா மக்​களவை​யில் அறி​முகம் செய்​தார். இதில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விட, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதில் மோடி அரசு தீவிரம் காட்டியது நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மக்களவை தொகுதி எண்ணிக்கையை தற்போதுள்ள 543 தொகுதியில் இருந்து 850 தொகுதிகளாக உயர்த்தவும், இதில் இருந்து மகளிருக்கு 272 தொகுதி வழங்கவும் திட்டமிடப்பட்டது. மேலும் கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், இந்த மசோதா மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்தது. இதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். மேலும் இந்த மசோதாவை கொண்டு வந்தால் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுவோம் என்று கூறி மசோதா நகலை தீயிட்டு கொளுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார். இதே போல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனுடன் இணைத்து கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பையும் மீறி இந்த மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இவற்றின் மீது விவாதம் தொடங்கியது. ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பலர் தங்கள் கேள்விகளையும் வாதங்களையும் முன்வைத்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பேசினர். இந்த விவாதம் நேற்று அதிகாலை சுமார் 1 மணி வரை நீடித்தது. இதையடுத்து நேற்று காலை மீண்டும் விவாதம் தொடங்கியது.

திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி, ஐக்கிய ஜனதா தளம் எம்பி ராஜிவ் ரஞ்சன் சிங், திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, சமாஜ்வாடி கட்சியின் டிம்பிள் யாதவ், ஷிரோமணி அகாலி தளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், திமுக எம்பி ராஜா, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜ எம்பி ஹேமமாலினி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். எம்பிக்களில் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

இறுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மிக நீண்ட விளக்கத்தை அளித்தார். இதனைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. மக்​களவை​யின் மொத்த பலம் 543 ஆகும். இதில் 3 இடங்​கள் காலியாக உள்​ளன. தற்​போது 540 எம்​.பி.க்​கள் மட்​டுமே உள்​ளனர். இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.​பி.க்​களின் ஆதரவு உள்​ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் 232 எம்.​பி.க்கள் உள்​ளனர். மூன்​றில் இரண்டு பங்கு ஆதர​வின் அடிப்​படை​யில் மக்​களவை​யில் அரசியல் சாசன சட்டத்திருத்த மசோ​தாக்​களை நிறைவேற்ற 352 எம்​.பி.க்களின் ஆதரவு தேவை. தற்​போதைய சூழலில் பாஜ கூட்​ட​ணிக்கு போதிய பெரும்பான்மை இல்​லை.

மாநிலங்​களவை​யின் மொத்த பலம் 245. இதில் ஓர் இடம் காலி​யாக உள்​ளது. அவை​யில் 244 எம்.​பி.க்​கள் மட்டுமே உள்​ளனர். இதில் பாஜக தலை​மையி​லான தே.ஜ. கூட்​ட​ணிக்கு 141 எம்.​பி.க்​கள் உள்ளனர். எதிர்க்​கட்​சிகளிடம் 83 எம்.​பி.க்​கள் உள்​ளனர். மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகை​யில் மசோ​தாக்​களை நிறைவேற்ற 163 எம்.​பி.க்​களின் ஆதரவு தேவை. மசோ​தாவை நிறைவேற்​றும் அளவுக்கு மாநிலங்​களவை​யிலும் பாஜ​வுக்கு பெரும்​பான்​மை இல்லை. இந்தச் சூழலில் மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் தோவ்வியடைந்தன.

தொகுதி மறுவரையறை, அரசியல் சாசன திருத்தம் உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது நடந்த வாக்கெடுப்பில் 528 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள், அதாவது 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 230 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக இந்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய பா.ஜ அரசு மேற்கொள்ள இருந்த சதி முறியடிக்கப்பட்டது.

மக்களவை மொத்த பலம் 543
காலியிடம் 3
பதிவான வாக்குகள் 528
மசோதா வெற்றி பெற தேவை 352
மசோதாவுக்கு ஆதரவாக பதிவான வாக்குகள் 298
எதிர்த்து பதிவான வாக்குகள் 230

* தொகுதி மறுவரையறையை கொண்டு வந்த மோடி, அமித்ஷாவின் தீய முயற்சி தோல்வி
தொகுதி மறுவரையறையை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைத்து அமல்படுத்த முயன்ற பிரதமர் மோடி, அமித்ஷாவின் தீய முயற்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர், தங்கள் ஆபத்தான தொகுதி மறுவரையறை முன்மொழிவுகளை (ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட) மகளிர் இடஒதுக்கீட்டுடன் இணைக்க மேற்கொண்ட தீய மற்றும் குறும்புத்தனமான முயற்சி, மக்களவையில் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது நமது ஜனநாயகம், நமது கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியலமைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். இது உயிரியல் ரீதியற்ற, இல்லற வாழ்வற்ற பிரதமரின் சட்டபூர்வத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மோடி அரசாங்கத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெளிவாக உள்ளன. 2029 தேர்தல்களுக்காக, மக்களவையின் தற்போதைய கட்டமைப்பிலேயே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அவர்கள் அமல்படுத்த வேண்டும்’ என்றார்.

* பா.ஜ கூட்டணி பெண் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் அரசியலமைப்புத் திருத்த மசோதா, மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* மோடியின் வெற்று முயற்சி படுதோல்வி: பிரியங்கா பெருமிதம்
பிரியங்காகாந்தி கூறுகையில்,’நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது இந்நாட்டுப் பெண்களின் உரிமையாகும்; அதனை அவர்கள் பெறுவதிலிருந்து யாராலும் தடுக்க இயலாது. என்றாவது ஒரு நாள், இது நிச்சயமாக நிஜமாக உருவெடுக்கும். எனினும், ஒரு வஞ்சகமான நடவடிக்கையாக, இந்த இடஒதுக்கீட்டு மசோதாவை 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புடனும், அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறை நடைமுறையுடனும் தொடர்புபடுத்தி, பெண்களின் மீட்பராகத் தன்னைச் சித்தரித்துக்கொள்ளப் பிரதமர் மோடி மேற்கொண்ட வெற்று முயற்சி தோல்வியடைந்துள்ளது. இன்று, நாட்டின் எதிர்க்கட்சிகள் தங்கள் உறுதியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் அதன் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துள்ளன.

இன்றைய நாள், இந்திய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகக் கருதப்படும். இன்றிலிருந்து, இந்நாட்டின் குரலை ஒடுக்குவதற்கான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்; ஏனெனில், இந்த மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருந்தால், நம் நாட்டில் ஜனநாயகம் உயிர்பிழைத்திருக்காது என்பது நம் அனைவருக்கும் ஆழமாகத் தெரியும். நமது அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்நாட்டை முன்னிறுத்தி, தேச நலன் சார்ந்த நமது கடமையை நாம் நிறைவேற்றியுள்ளோம்’ என்றார்.

* காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்
மசோதா தோல்வி அடைந்தது குறித்து அமித்ஷா கூறுகையில், ’நேற்று, மக்களவையில் மிகவும் விசித்திரமான ஒரு காட்சி அரங்கேறியது. ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ தொடர்பான, அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக்கூடிய இந்த மசோதாவை நிராகரிப்பதும், அதனை ஒரு கொண்டாட்டமாக ஏற்றுக்கொண்டு, அதன் மீது வெற்றிக் கோஷங்களை எழுப்புவதும் உண்மையிலேயே வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும், கற்பனைக்கும் அப்பாற்பட்டதுமான ஒரு செயலாகும்.

இப்போது, ​​நாட்டின் பெண்களுக்கு மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் கிடைக்கவேண்டிய, அவர்களின் அடிப்படை உரிமையான 33 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இத்தகைய செயலைச் செய்வது இது முதல் முறையல்ல; மாறாக, அவர்கள் இதனைத் தொடர்ந்து பலமுறை செய்து வருகின்றனர். இவர்களின் மனப்பான்மை பெண்களின் நலனுக்கோ அல்லது நாட்டின் நலனுக்கோ சற்றும் உகந்ததாக இல்லை. ‘நாரி சக்தி’க்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பு இத்துடன் நின்றுவிடாது; இது வெகுதூரம் வரை எதிரொலிக்கும் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் 2029 மக்களவைத் தேர்தல்களில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்றார்.

* அரசியலமைப்பு மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது: ராகுல் காந்தி கருத்து
பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய, அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா, அரசியலமைப்பு மீதான ஒரு தாக்குதல். அதனை எதிர்க்கட்சிகள் முறியடித்துள்ளன என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் பிரதமர் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர் 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை வழங்கும். நான் முன்பே கூறியது போல, இது அரசியலமைப்பு மீதான ஒரு தாக்குதல். அதனை நாங்கள் முறியடித்துவிட்டோம். இது பெண்களுக்கான மசோதா அல்ல என்றும், இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றும் நாங்கள் தெளிவாகக் கூறினோம்;

அந்த முயற்சியை நாங்கள் தடுத்து நிறுத்திவிட்டோம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் விரும்பினால், அவர் 2023ஆம் ஆண்டு சட்டத்தைக் கொண்டுவந்து, அதனை இன்றிலிருந்தே அமல்படுத்த வேண்டும். முழு எதிர்க்கட்சியும் உங்களுக்கு ஆதரவளித்து, இன்றிலிருந்தே பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும்’ என்றார். பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,’இந்தத் திருத்த மசோதா தோல்வியடைந்துவிட்டது. அரசியலமைப்பைச் சிதைப்பதற்காக, பெண்கள் என்ற பெயரில் அவர்கள் ஒரு அரசியலமைப்புக்கு முரணான தந்திரத்தைப் பயன்படுத்தினர். இந்தியா இதனைப் பார்த்தது. இந்தியா கூட்டணி இதனைத் தடுத்து நிறுத்தியது. அரசியலமைப்பு வாழ்க’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories: