லெபனான்போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

ஈரான் மற்றும் லெபனானில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சர்வதேச வர்த்தகத்தில் மிக முக்கியமான மாற்றத்தை ஈரான் அறிவித்துள்ளது. உலக அளவில் எரிசக்தி போக்குவரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் இனி தடையின்றி பயணிக்கலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.

லெபனான் பிராந்தியத்தில் அமைதி நிலவி வருவதால், சர்வதேச கடல்சார் போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கில் ஈரான் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இது உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளதோடு, குறிப்பாக எல்பிஜி (LPG) நுகர்வோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்னி இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹிஸ்புல்லா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தியில் இதுவரை நிலவி வந்த கடல்சார் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் பெரும் பகுதி இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே நடைபெறுவதால், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை மீண்டும் சீராக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது என்று ஈரான் உலக நாடுகளுக்கு உறுதியளித்துள்ளது. இந்த மாற்றத்தினால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் தடையின்றி கிடைப்பதோடு, வர்த்தகப் போக்குவரத்துச் செலவுகளும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒட்டுமொத்த சர்வதேச வர்த்தகச் சூழலிலும் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: