மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு அரியானாவில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நீக்கம்

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜ வேட்பாளர் சஞ்சய் பாட்டியா எளிதில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் கரம்வீர் சிங் பவுத் இரண்டாம் இடம்பிடித்தார். அதேசமயம், பாஜ ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தல் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஷால்லி சவுத்ரி, ரேணு பாலா, முகமது இல்யாஸ், முகமது இஸ்ரயில், ஜர்னைல் சிங் ஆகியோர், பாஜ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தலுக்கு ஆதரவாக வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தரம்பால் மாலிக் தலைமையிலான காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அந்த குழு 5 உறுப்பினர்களுக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு 5 உறுப்பினர்களும் அளித்த பதிலின் அடிப்படையில் அவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்ய கடந்த 6ம் தேதி பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களை கட்சியில் இருந்து நீக்க தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து 5 பேரும் நேற்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories: