எனது முயற்சி காரணமாக அம்பை தொகுதி மக்களுக்கு அகஸ்தியர் அருவியில் குளிக்க இலவச அனுமதி

விகேபுரம்,ஏப்.17: எனது முயற்சி காரணமாக அம்பை தொகுதி மக்களுக்கு அகஸ்தியர் அருவியில் இலவசமாக குளிப்பதற்கு அனுமதியை பெற்று தந்தேன் என்று விகேபுரத்தில் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பெருமிதத்துடன் தெரிவித்தார். அம்பை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தொகுதிக்குட்பட்ட விகேபுரம் நகராட்சி அம்பலவாணபுரம், பெரியதெரு, மேல காந்திநகர், பூந்தோட்ட தெரு, மீனாட்சிபுரம், கீழக்கொட்டாரம், மேல கொட்டாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘அம்பை சட்டமன்ற தொகுதி மக்களிடமும் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து நான் சொந்த முயற்சியில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். எனது முயற்சியின் பலனாக அம்பை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவசமாக அருவியில் குளிப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அம்மா கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும். மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் அரிசியுடன் 1 கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திருமணம் ஆகாத ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்த ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகளின் நலன் கருதி பாபநாசம் முதல் கோபாலசமுத்திரம் வரை நெல்மணிகளை காத்திட நெல் குடோன் அமைக்கப்படும். வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி நதி மாசுபடாமல் காக்க அதிமுக ஆட்சி வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றின் அருகே இருந்தும் சில இடங்களில் சீரான குடிநீர் வழங்கப்படுவதில்லை. அதிமுக ஆட்சி வந்தவுடன் தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் சீரான குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். எனது மக்கள் பணி தொடர அனைவரும் இரட்டை இலை சின்த்தில் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

பிரசாரத்தின் போது, தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்பி சவுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, விகேபுரம் நகரச் செயலாளர் கண்ணன், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் இமாக்குலேட், மாவட்ட அதிமுக தொழிற்சங்க அமைப்பாளர் அரிச்சந்திரன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் அருண், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் கணேச பெருமாள், இளைஞரணி செயலாளர் பொன் ஸ்டாலின், பாஜ மண்டல தலைவர் சந்தன குமாரி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: