ஓட்டப்பிடாரம், ஏப். 17: கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனாரின் 256வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் பொங்கலிட்டு அவரது சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தினர். முளைப்பாரியுடன் நினைவு ஜோதி ஊர்வலமும் நடைபெற்றது. வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்த நாளை முன்னிட்டு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் விநாயகர் கோயில் முன்பு பொங்கலிடப்பட்டது. பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சுந்தரலிங்கனாரின் மணிமண்டபத்திற்கு வந்தனர். அங்கு அவரது சிலைக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர் முருகன் தலைமையில் செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், வன்னியராஜ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் ஓட்டப்பிடாரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக முளைப்பாரி மற்றும் ஆண்கள் நினைவு ஜோதியை கவர்னகிரி மணிமண்டபம் வரையில் எடுத்து வந்தனர். விழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
