நாகர்கோவில், ஏப்.16: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில், எதிர்வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வித்தியாசமான முறையில் வாக்காளர் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் மனிஷா செந்தியா நேரடியாக களமிறங்கி வாக்காளர்களைச் சந்தித்தார். பொதுவாக வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பது போல, தட்டில் வெத்திலை, பாக்கு, பழங்கள் மற்றும் மலர்கள் வைத்து, அதனுடன் தேர்தல் அழைப்பிதழையும் வழங்கி பொதுமக்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ‘வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை; தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள்’ என்று பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். வாக்குச் சதவீதத்தை உயர்த்த அரசு எடுத்து வரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ‘பாரம்பரிய அழைப்பு’ முறை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வின் போது தேர்தல் அதிகாரிகள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் உடனிருந்தனர். ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
