சென்னை, ஏப். 16: சென்னையை சேர்ந்த நேத்ரோதயா என்ற அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்வதற்கான ஓட்டுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறைப்படி தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் அச்சு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் துண்டு சீட்டில் காட்டப்படும். இதனை சில நொடிகள் மட்டுமே பார்க்க முடியும். இந்த நடைமுறைப்படி பார்வை மாற்றுத் திறனாளிகளால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள இயலாது என்பதால் ஹெட் ஃபோன் மூலம் கேட்கும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஓட்டுக்கு ஒப்புகை சீட்டு நடைமுறையை அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்ட நிலையில், தற்போது புதிய நடைமுறைகளை சேர்க்க முடியாது. அடுத்த தேர்தலுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
