திருவள்ளூர், ஏப்.16: திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ரூ.1.75 கோடி மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கல்லூரி உரிமையாளர் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.பாஸ்கரன். இவர் அய்யத்தூர் ஊராட்சியில் பஜரங் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் பி.வி.ரமணா. இவர் கடந்த 2018ம் ஆண்டு பஜரங் பொறியியல் கல்லூரி தலைவர் எம்.ஜி.பாஸ்கரனிடம் அவரது தொழில் வளர்ச்சிக்காக சிறுக, சிறுக ரூ.1 கோடியே 75 லட்சம் கடனாக வாங்கியவர் திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு நேரில் வந்து பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டு சென்றவர் அதன் பிறகு நேரில் சந்திக்காமலும் செல்போனில் தொடர்பு கொண்டால் முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். பணம் தருவதாக சொன்ன அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பணத்தையும் தராமல் அதற்கு வட்டியும் தராமல் ஏமாற்றியதோடு பதில் சொல்லாததால் அவர் தன்னை ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.வி.ரமணா தனது வேட்பு மனு தாக்கலின் போது சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் இந்த ரூ.1.75 கோடி கடன் தொகையை அவர் மறைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஜரங் பொறியியல் கல்லூரி தலைவர் எம்.ஜி.பாஸ்கரன் போலீசில் புகார் கொடுப்பதாக அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணாவிடம் கூறியுள்ளார்.
அதற்கு வேட்பாளர் பி.வி.ரமணா, பத்தோடு இது ஒன்னு என்று, அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.ஜி.பாஸ்கரன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தொழில் விருத்திக்காகவும், தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வாங்கிய ரூ.1.75 கோடியை தராமல் ஏமாற்றிய அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் வாங்கிய கடனை ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்படும் வேட்பாளர் பி.வி.ரமணா வெற்றி பெற்று பொது மக்களுக்கு என்ன செய்வார் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், அவர் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுத்த நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
