சென்னை, ஏப்.16: அரக்கோணம் ரயில் நிலையத்தில் திட்டமிடப்பட்ட ரயில் தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 16ம் தேதி(இன்று) முதல் 19ம் தேதி வரை சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வே கோட்டம் கூறியிருப்பதாவது: தண்டவாள அமைப்பு மேம்பாடு தொழில்நுட்ப வசதிகள் புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் சில மின்சார ரயில் இறுதி நிலையம் மாற்றப்பட்டு பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அரக்கோணம் வரை பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள் திருவலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மாற்று போக்குவரத்துக்கு வசதிகளை பயன்படுத்த வேண்டி இருக்கும். அதே போல் திருத்தணியில் இருந்து 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்படும் மின்சார ரயிலும் தனது சேவையை திருவலாங்காடு ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் எனும் தெரிவித்துள்ளது. இதனால் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத் திட்டத்தை சரி பார்த்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பயணிகள் தாமதம் மற்றும் சிரமங்களை தவிர்க்க தேவையான மாற்று ஏற்பாடுகளை முன்னதாகவே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம்போல் நேர அட்டவணையின்படி மீண்டும் இயங்கும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்காலிகமாக மட்டுமே இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
