பூந்தமல்லி, ஏப்.16: மதுரவாயல் தொகுதி தவெக வேட்பாளர் பிரசாரத்தில் அதிக கூட்டம் இருப்பதைப் போல காட்டுவதற்காக ரூ.300 மற்றும் பிரியாணி கொடுத்து ஆட்களை கூலிக்கு அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏவான காரம்பாக்கம் கணபதி போட்டியிடுகிறார். அதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிடுகிறார். தவெக சார்பில் ரேவந்த் சரண், நாதக சார்பில் ரேவதி போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து மீண்டும் திமுக ஆட்சி அமைய வாக்கு சேகரித்து வருகிறார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் பெஞ்சமினும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், களத்திற்கு புதிதாக வந்துள்ள தவெக வேட்பாளரான ரோகினி திரையரங்க இயக்குநராக உள்ள ரேவந்த் சரண் திக்குத் தெரியாமல் திணறி வருகிறார். எப்படி தேர்தல் பணிகளில் ஈடுபடுவது, யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்று எதுவும் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். தன்னுடன் உள்ள 5 பேரின் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு பிரசாரம் மேற்கொள்கிறார். மதுரவாயல் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் அரசியலில், தேர்தல் பணிகளில் நீண்ட அனுபவமும், திறமையும் உள்ளவர்கள். அவர்களை எதிர்த்து அவர்களின் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் செயல்பட முடியுமா? என்று தவெக வேட்பாளர் அச்சத்தில் இருப்பதாக அவரது கட்சியினரே கூறுகின்றனர்.
அவரது பிரசாரத்திற்கு பெரும் அளவில் விஜய் ரசிகர்கள் வருவார்கள், ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டம் இல்லாததால், கூட்டம் சேர்ப்பதற்காக தவெக வாட்ஸ்ஆப் குழுக்களில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.அதில் தினமும் காலையில் 3 மணி நேரம் ரேவந்த் சரண் பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.300, ஒரு துண்டு, பிரியாணி, வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும், வர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட எண்ணில் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் துண்டு பிரசுரங்கள் வழங்குவதற்கு 15 பேர் தேவை என்றும் அவர்களுக்கும் இதே போல வழங்கப்படும் என்றும் அந்த சமூக வலைத்தளப் பதிவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தவெக கட்சிக்கு தானாக கூட்டம் சேர்கிறது என்று இதுவரை கூறி வந்ததெல்லாம் வெறும் பிம்பம்தான் என்றும், ரூ.300 மற்றும் பிரியாணி கொடுத்துதான் பல இடங்களில் கூட்டம் கூட்டுகிறார்கள், என்பது தெரியவந்துள்ளது. பணத்தை வைத்து எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்ற கனவில் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் களத்திற்கு வந்த பிறகு கள நிலவரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வீணாக பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எப்படியும் விஜய்க்காக ஓட்டு போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு ஊடகங்களையும், பத்திரிகைகளையும் புறக்கணித்து விட்டு சமூக ஊடகங்களை மட்டும் நம்பியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்தாலே வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
