தேங்காய் எண்ணெய் சமையலுக்கு ஏற்றதா?

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் எந்த எண்ணெய் உடல் நலத்திற்கு ஏற்ற எண்ணெய் என்ற குழப்பம் மக்களிடையே எப்போதும் நிலவிக் கொண்டே இருக்கிறது. இது குறித்த விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் இப்படி யோசித்துக் கொண்டிருந்தால், நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சமையலில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடே பிரதானமாக உள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதில் அச்சம் உள்ளது. ஆனால், இந்த அச்சம் தேவையற்றது என்கிறது ஆய்வுகள். எப்படி நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளனவோ, அதுபோன்றே தேங்காய் எண்ணெய்க்கும் இரண்டு குணங்கள் உள்ளது.தேங்காய் எண்ணெயில் SFA 86 சதவீதம் உள்ளதால் அது நம் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் கொஞ்சமாக அதிகப்படுத்தும் என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்தான். அதேநேரம், இது நல்ல கொலஸ்டிராலையும் அதிகப்படுத்தும் என்பதும் உண்மை. மேலும், நாம் அதிகம் பயப்படும் டிரைகிளிசரைடு கொலஸ்டிராலைக் குறைக்கிற குணமும் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

இன்னொரு முக்கிய ஆரோக்கிய தகவல், இதில் இருக்கிற லாரிக் அமிலம் (Lauric acid) இது ஒரு கிருமிக் கொல்லி. அதுபோன்று தேங்காய் எண்ணெயில்தான் தாய்ப்பாலுக்கு நிகரான லாரிக் அமிலம் இருக்கிறது.அடுத்ததாக நடுத்தர வகை டிரைகிளிசரைடு கொலஸ்டிரால் இதில் மிக அதிகம். இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இதைச் செரிமானம் செய்ய கல்லீரலின் உதவி தேவையில்லை. நேரடியாகவே குடலில் உறிஞ்சப்பட்டுவிடும். உடலுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். கல்லீரலுக்கு வேலை மிச்சம்.

இவ்வளவு நன்மைகளைத் தரும் தேங்காய் எண்ணெயை கெட்ட கொலஸ்டிராலைக் கொஞ்சம் உயர்த்துகிறது என்கிற காரணத்துக்காக ஒதுக்குவது நியாயமில்லை. தேங்காய் எண்ணெயை பிரதானமாகப் பயன்படுத்தும் கேரள மக்களிடமே ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியில், தேங்காய் எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்துவதால் மாரடைப்புக்கான சாத்தியம் அதிகரிப்பதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, தேங்காய் எண்ணெயை அளவோடு பயன்படுத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை.அது போன்று அறிவியல் ஆராய்ச்சிப்படி சொன்னால், இன்று புழக்கத்தில் இருக்கும் எண்ணெய் வகைகளில் சிறந்த சமையல் எண்ணெய் என்று எதையும் கைகாட்ட முடியாது. இருந்தாலும், அதிக சூடுபடுத்தாத, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய் இந்த இரண்டையும் வாரம் ஒன்று வீதம் சுழற்சி முறையில் பயன்படுத்துவதுதான் சிறந்த வழி. விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், பாமாயில் போன்றவற்றை தவிர்ப்பது நலமே.

தொகுப்பு: ஸ்ரீ

Related Stories: