காசநோய் – காரணமும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ம்தேதி, உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. 1882-ம் ஆண்டு ராபர்ட் கோச் என்பவரால் காசநோயை உருவாக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது காசநோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு உலக காசநோய் தினத்தின் கருப்பொருள், “ஆம், நம்மால் காசநோயை ஒழிக்க முடியும்: அரசுகளின் வழிகாட்டுதலுடன் மக்களின் பலத்துடன்” என்பதாகும். காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அரசாங்கங்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது என்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் மாளவிகா. அவர் காசநோயின் காரணமும் தீர்வும் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவைஉலகளவில் மிகவும் பரவலாக காணப்படும் தொற்றுநோய்களில் ஒன்றாக காசநோய் தொடர்ந்து இருந்து வருகிறது. உலகில் காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்; இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. இருப்பினும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்தால் காசநோயைத் தடுக்கவும், முழுமையாக குணப்படுத்தவும் முடியும்.

இந்தியாவின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்கி காசநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காசநோய் என்பது காற்றில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இது முக்கியமாக நுரையீரலை பாதிக்கிறது. ஆனால் நெறிக்கட்டிகள், எலும்புகள், வயிறு மற்றும் மூளை போன்ற பிற உறுப்புகளையும் இது பாதிக்கலாம். காசநோய் உள்ள ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் பாக்டீரியாக்கள் காற்றில் கலக்கின்றன. அந்த காற்றை மற்றவர்கள் சுவாசிக்கும்போது அவர்களுக்கும் நோய் பரவுகிறது.

பல நோயாளிகள் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை அலட்சியப்படுத்துகிறார்கள். இதனால் நோயைக் கண்டறிவது தாமதமாவதுடன், மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் அதிகரிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியான இருமல், குறிப்பாக மாலை நேரத்தில் காய்ச்சல், இரவில் வியர்த்தல், காரணம் இல்லாமல் உடல் எடை குறைதல், பசியின்மை, சோர்வு மற்றும் உடல் பலவீனம், சில நேரங்களில், இருமும்போது ரத்தம் வருதல் போன்ற இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

காசநோயைக் கட்டுப்படுத்துவதில் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சளி பரிசோதனை, நெஞ்சக எக்ஸ்ரே மற்றும் மூலக்கூறு சோதனைகள் போன்ற பரிசோதனைகள் மூலம் நோயை விரைவாக உறுதிப்படுத்தலாம். இதன் மூலம் ஆரம்பத்திலேயே சிகிச்சையைத் தொடங்க முடிகிறது.

சாதாரண காசநோய்க்கான சிகிச்சையில் பொதுவாக சுமார் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் மீண்டும் வராமல் தடுக்கவும், மருந்துகளுக்கு கட்டுப்படாத தீவிர காசநோய் ஏற்படாமல் தடுக்கவும் மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சையை முழுமையாக முடிப்பது மிகவும் அவசியமாகும்.

தடுப்பு முறைகள்

ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து நோயைக் கண்டறிதல், பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை பாதியில் விடாமல் முழுமையாக முடித்தல், குழந்தைகளுக்கு பி.சி.ஜி தடுப்பூசி போடுதல், நல்ல ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரித்தல், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருத்தல், வீடுகள் மற்றும் பணியிடங்களில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்தல் போன்றவை ஆகும்.

உதாரணமாக, காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியும். தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் அல்லது உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. எளிய பரிசோதனைகள் மற்றும் சிறந்த மருத்துவ பராமரிப்பு மூலம், காசநோயை முன்கூட்டியே கண்டறிந்து வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும்.

மேலும், விழிப்புணர்வை அதிகரிப்பதும், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதுமே நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முக்கிய வழிகள் ஆகும்.

காசநோய் இல்லாத எதிர்காலம்

இந்த உலக காசநோய் தினத்தில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், முன்கூட்டியே மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், காசநோயை ஒழிப்பதற்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். விழிப்புணர்வு, ஆரம்பகால நோயறிதல் மற்றும் முழுமையான சிகிச்சை ஆகியவற்றின் மூலம் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்

Related Stories: