சாரா அர்ஜூன் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சாரா அர்ஜூன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர், பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளவயது நந்தினியாக தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சமீபத்தில் சாரா ஹிந்தியில், துரந்தர் திரைப்படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக களம் இறங்கியுள்ளார். இதன் மூலம் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ள சாராவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்: பொதுவாக ஃபிட்னெஸ் என்று எடுத்துக் கொண்டால், அது தினசரி உடல் இயக்கம், சரியான உணவுமுறை மற்றும் மனநிலை ஆகியவற்றை இணைத்த வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டதாகும். இவற்றை முறையாக கடைப்பிடித்தாலே உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும். அந்தவகையில் எனது தினசரி உடற்பயிற்சி என்பது தினசரி ஜிம் பயிற்சி, நடைப்பயிற்சி அல்லது வீட்டிலேயே செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள் செய்கிறேன். நான் உடலை வருத்திக் கொள்ளும் கடுமையான ஜிம் பயிற்சிகள், எடை தூக்கும் பயிற்சிகள் போன்றவற்றை செய்வதில்லை. அதற்கு பதிலாக எனது வயதுகேற்ற எளிமையான உடற்பயிற்சிகளையே செய்கிறேன்.

அந்தவகையில், அடிப்படை வலுவூட்டும் பயிற்சிகள், இயக்கத் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் போன்றவற்றை எனது பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் செய்கிறேன். இந்த பயிற்சிகள் எனது உடல் நலத்தை பாதுகாக்கிறது.மேலும், விளையாட்டு மற்றும் வெளிப்புற செயல்பாடுகளிலும் என்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்கிறேன். இவை எனக்கு ஒருங்கிணைப்பு திறன் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதோடு, உடற்பயிற்சியை சுவாரஸ்யமாகவும் மாற்றுகின்றன. இதனால், உடற்பயிற்சி ஒரு கடமையாக அல்லாமல், மகிழ்ச்சியான செயல்பாடாக மாறுகிறது.

அதுபோன்று எனது உடற்பயிற்சி முறையில் நடனத்திற்கும் முக்கிய இடம் உள்ளது. நடனம், நெகிழ்வு திறன், சமநிலை மற்றும் இதய நலத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், இது எனது தினசரி பயிற்சிக்கு உற்சாகத்தையும் சேர்க்கிறது. உடலை இயக்கும் இந்த கலை மனஅழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.மேலும், நெகிழ்வு திறனை பராமரிப்பதற்காக, நீட்டிப்பு பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். இந்த பயிற்சிகள், காயங்களைத் தவிர்க்கவும், உடற்பயிற்சிக்குப் பிறகு உடல் விரைவாக மீளவும் உதவுகின்றன. இதனால், என்னால் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.

டயட்: நான் முன்பே சொன்னது போன்று சரியான உணவுமுறையே ஆரோக்கியமான உடலமைப்பை தருகிறது. எனவே, கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட டயட்டுகளை விட, உடலுக்கு தேவையான சத்துகளை வழங்கும் உணவையே நான் எடுத்துக் கொள்கிறேன். அந்த வகையில், எனது டயட்டில் புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள்மற்றும் நட்ஸ் வகைகள் போன்ற சத்தான உணவுகளே இருக்கும். அதுவே, எனது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த சத்துக்கள் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை அளிக்கின்றன. வெளிப்புற பராமரிப்பை விட, உடலின் உள்ளார்ந்த ஆரோக்கியமே அழகை தீர்மானிக்கும் என்று நான் நம்புகிறேன்.

பியூட்டி: பொதுவாக நான் ஹெவி மேக்கப்பை தவிர்த்துவிட்டு லைட் மேக்கப்பையே விரும்புகிறேன். இயற்கையாகவே எனது சருமம் பளபளப்பாக இருப்பதால் நான் அதற்காக பெரிதாக மெனக்கெடுவதில்லை. அழகு சாதன பொருட்களையும் கெமிக்கல்கள் கலக்காத இயற்கையான பொருட்களாகத்தான் பயன்படுத்துகிறேன். எனது உணவுமுறை சரியாக இருப்பதால், எனது தோற்றம் மிகவும் இயல்பாகவும் தனித்துவமாகவும் தெரிகிறது.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Related Stories: