நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

உடலில் புகுந்து, புற்றிசல் போல் வளர்ந்து உயிர்அணுக்களை அழித்து, உயிரை மாய்த்துவிடும் செல் கிருமிகளையே புற்றுநோய் என்கிறோம். இந்த புற்றுநோய்களில் பலவகை உண்டு. அதில், உலகளவில் முதன்மையிடம் வகிப்பது, நுரையீரல் புற்றுநோய்தான். எனவே, நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. காரணம், நாம் தற்போது, மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம். இப்படி மாசு நிறைந்த காற்றை அதிகம் சுவாசிப்பதும் கூட நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து நுரையீரல் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் காதர் உசேன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

நுரையீரல் புற்றுநோய் என்பது என்ன?

நாம் சுவாசிக்கும்போது மூச்சுகாற்றை உள்ளிழுத்து தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வதும். மூச்சை வெளியே விடும்போது தேவையற்ற கார்பன் -டை- ஆக்சைடை வெளியேவிடுவதும் நுரையீரலின் பணியாகும். இந்த நுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதே நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது.இந்த நுரையீரல் புற்றுநோய்தான் உலகிலேயே அதிகம் பாதிக்கக்கூடிய முதன்மையான புற்றுநோயாகும். தமிழகத்தைப் பொருத்தவரை நுரையீரல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இது மூச்சுக்குழலில் ஏற்பட்டாலும் அதையும் நுரையீரல் புற்றுநோய் என்றுதான் சொல்கிறோம்.

நுரையீரல் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

நான்கு வகையான ஆட்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது. அதில் யார் யார் அடங்குவர் என்றால், முதலில் இருப்பவர்கள், புகைப்பிடிப்பவர்கள். அவர்களுக்குத்தான் 90 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. அடுத்தபடியாக புகைப்பிடிப்பவர்களின் அருகே இருந்து சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. மூன்றாவதாக, குடும்ப பாரம்பரியத்தில் யாருக்கேனும் முன்பு இருந்திருந்தால் அவர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. நான்காவது பெட்ரோலியம், ரேடான் தொழிற்சாலை, டை தொழிற்சாலை, ரப்பர் தொழிற்சாலை, உரத்தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. இதைத்தவிர, மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்.

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?

நுரையீரல் புற்றுநோயைப் பொருத்தவரை ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகள் எதுவும் தெரியாது. காரணம், ஒருவருக்கு 50-70க்குள்தான் நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படும். ஏனென்றால், ஒருவர் தொடர்ந்து 15 ஆண்டுகள் புகைப்பிடிக்கும்போதுதான் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. உதாரணமாக ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்படித் தொடர்ந்து பத்து ஆண்டுகள் அவர் புகைபிடிக்கும்போது, அவரது உடல்நிலை, இருபது ஆண்டுகளாக புகைபிடிப்பவரின் உடல்நிலைக்குச் சமமாகிவிடும். இதுபோன்ற நிலையில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

மேலும், நுரையீரல் புற்றுநோயைப் பொருத்தவரை, கொஞ்சம் முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் தென்படும். அதில் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுவது, இருமும்போது ரத்தம் வருவது, மூச்சு விடுவதில் சிரமம், பசி இருக்காது. உடல் எடை குறைந்து கொண்டே போவது, எலும்புகள் வலிப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

இருமல் வரும்போது ரத்தம் வருபவர்கள் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலையில் இருப்பார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம்நிலையில் வருபவர்களை காப்பாற்ற முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது உள்ள நவீன மருத்தவ வசதிகளால், மூன்றாம் நிலையில் வந்தாலும், அவர்களை 50 முதல் 60 சதவிகிதம் காப்பாற்றிவிடலாம்.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

நுரையீரல் புற்றுநோயைப் பொருத்தவரை 5 வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவை, அறுவைசிகிச்சை, கீமோ தெரபி (நரம்பு வழியாக புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து போராடக் கூடிய மருந்தை உட்செலுத்துவது), கதிர்வீச்சு (ரேடியேஷன்), இம்மினோ தெரபி (ஒருவகையான ஊசியை நரம்பு வழியாக ஏற்றுவோம், இது உடலுக்குள் சென்றதும் உடலே, புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து போராடி அழிக்கும்) நமது உடலில் இயற்கையாகவே புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து அழிக்கக் கூடிய அணுக்கள் உள்ளது. அதனை தூண்டிவிட்டு புற்றுநோய் கிருமிகளை அழிக்கக் கூடியதுதான் இந்த இம்மினோ தெரபி. அடுத்தது, தார்கெட்டட் தெரபி.

இது பெண்களை பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், பெண்கள் புகைப்பிடிதிருக்க மாட்டார்கள். தொழிற்சாலைகளில் பணி புரிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு மரபணுவில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டிருந்தால், அதனால் நுரையீரல் புற்றுநோய் வரும். அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதுதான் டார்கெட்டட் தெரபி. இந்த 5 சிகிச்சை முறையையும் முழுமையாக கடைபிடித்தால், நுரையீரல் புற்றுநோயிலிருந்து நிச்சயம் குணம் பெறலாம். அதுபோன்று, அவரவர் உடலில் ஏற்பட்டிருக்கும் தீவிரத்தைப் பொருத்து இம்மினோ தெரபியும், டார்கெட்டட் தெரபி சிகிச்சை முறைகள் மாறுபடும்.

புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வது எவ்வாறு?

இன்றைக்கு உள்ள வாழ்க்கை முறைகளால், புற்றுநோயே வராமல் தற்காத்துக் கொள்வது என்பது முடியாத காரியம். ஆனால், ஆரம்பநிலையில் கண்டுபிடித்துவிட்டால், 98 சதவிகிதம் குணப்படுத்திவிடலாம். எனவே, அதற்கான விழிப்புணர்வுதான் நம்மிடம் இருக்க வேண்டும். பொதுவாக, 20 ஆண்டுகளாக ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் கட்டாயமாக ஆண்டுக்கு ஒருமுறை சிடி ஸ்கேன் செய்து கொண்டால், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.

உதாரணமாக, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள 300 பேருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்தால், அதில் 3 பேருக்காவது நுரையீரல் புற்று இருப்பது தெரிய வருகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால், நான் மேலே சொன்னபடி புகைப்பவர்கள், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என யாருக்கெல்லாம் நுரையீரல் புற்று வர அதிக வாய்ப்பிருக்கிறதோ, அவர்கள் எல்லாம், ஆண்டுக்கு ஒருமுறை சிடி ஸ்கேன் செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், கோவிட் தொற்று ஏற்பட்டபோது, பொரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போது, பெரும்பாலானவர்களுக்கு, நுரையீரல் சிடி ஸ்கேன் மூலம் ஸ்கீரினிங் செய்யப்பட்டது. அப்போது, நுரையீரல் புற்றுநோய் ஆரம்பநிலையில் இருந்த நிறைய பேரை கண்டறிய முடிந்தது. கோவிட் தொற்று உலகளவில் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த நுரையீரல் புற்றுநோய் ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டவர்கள் எல்லோருக்கும் நல்லதுதான் செய்திருக்கிறது. அவர்கள் உரியநேரத்தில் ஸ்கீரினீங் செய்யப்பட்டதால், அவர்கள் முற்றிலும் நுரையீரல் புற்றுநோயிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளார்கள். எனவே, நுரையீரல் புற்றுநோய் வரும் அபாயத்தில் இருப்பவர்கள் எல்லோருமே சிடி ஸ்கேன் செய்து கொள்வது மிகவும் நல்லது.

அதுபோன்று இப்போதுள்ள நவீன மருத்துவ தொழில்நுட்ப உதவியால் அறுவை சிகிச்சை எல்லாம் மிக சுலபமாகிவிட்டது. முன்பெல்லாம் ஓபன் சர்ஜரிதான் செய்வோம். ஆனால், தற்போது, எங்கே பாதிப்பு இருக்கிறதோ, அங்கே மூன்று துளைகள் இட்டு, அதன்மூலம் சிகிச்சை அளிப்போம். இதனால், நோயாளிகள் இரண்டே நாளில் வீட்டிற்கு சென்றுவிடலாம். ஒரு மாதம், இரண்டு மாதம் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. எனவே, நுரையீரல் புற்றுநோயை பொருத்தவரை, மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களை அவ்வப்போது, சோதனை செய்து கொண்டால், நுரையீரல் புற்றுநோயை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி

Related Stories: