நன்றி குங்குமம் தோழி
மருத்துவத் தொழில்நுட்பம் விண்ணைத் தொடும் அளவிற்கு வளர்ந்துள்ள போதிலும், உலக அளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணிகளில் புற்றுநோய் இன்றும் முன்னிலையில் உள்ளது. மரபணு மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மாறிவரும் வாழ்வியல் முறைகளால் செல்கள் தறி கெட்டு வளர்வதே இந்நோயின் அடிப்படை அறிவியல். எனினும், தொடக்க நிலையிலேயே கண்டறிதல் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோயை வெல்ல முடியும். அதே சமயம் சில புற்றுநோய்கள் எந்தவித அறிகுறிகள் தென்படாமலே நம்முடைய உடலில் வளர்ந்து கொண்டே இருக்கும். அதில் ஒன்றுதான் சிறுநீரகத்தை பாதிக்கும் புற்றுநோய்.
‘‘இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருக்காது. எல்லோரும் போல் பாதிக்கப்பட்டவர்கள் நார்மலாகத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு வேறு உடல் பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கும் போதுதான் சிறுநீரக புற்றுநோயின் தாக்கம் இருப்பதையே கண்டறிய முடியும். அப்படித்தான் எங்களிடம் வேறு பிரச்னைக்கு சிகிச்சைக்காக வந்த இரு பெண்களுக்கு சிறுநீர் புற்றுநோயின் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தோம்’’ என்றார் தலைமை சிறுநீரக மருத்துவர் டாக்டர் அருண்குமார் பாலகிருஷ்ணன்.
‘‘23 வயதான பெண், அவருக்கு முதுகில் தொடர்ச்சியாக வலி இருந்ததால், எங்களிடம் சிகிச்சைக்காக வந்தார். அப்போது செய்த ஆய்வில்தான் சிறுநீரகத்தில் சிறிய அளவு கட்டி இருப்பது தெரியவந்தது. முதுகில் வலி இருந்ததை தவிர அவருக்கு வேறு எந்த அறிகுறியும் இல்லை. மற்றுமொரு பெண்மணி 38 வயதானவர். இல்லத்தரசி. இவருக்கும் எந்தவித ஆபத்தான அறிகுறிகளும் தென்படவில்லை. இவரும் வேறு பிரச்னைக்காகத்தான் சிகிச்சைக்கு வந்தார். ஸ்கேன் செய்த போதுதான் புற்றுநோய் கட்டி சிறுநீரகத்தில் இருப்பது தெரிய வந்தது.
சிறுநீரகத்தை தாக்கும் புற்றுநோயினை ‘சைலன்ட் புற்றுநோய்’ என்றுதான் மருத்துவ துறையில் குறிப்பிடுகிறோம். காரணம், இந்த நோயின் தாக்கம் முற்றிய பிறகு அதற்கான அறிகுறிகள் வெளிப்படும். எங்களிடம் சிகிச்சைக்காக வந்த இரு பெண்களுக்கும் ரோபோடிக் முறையில் சிறுநீரகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.
இந்த புற்றுநோய் எந்தவித அறிகுறிகளையும் கொடுக்காது என்பதால்தான் நாங்க ஒவ்வொரு முறையும் மாஸ்டர் செக்கப் செய்யும் போது ரத்தப் பரிசோதனை மட்டுமில்லாமல், உடலில் உள்ள உறுப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம். முன்கூட்டியே பிரச்னையை கண்டறிந்தால் சிகிச்சை செய்வதும் சுலபம். குறிப்பாக சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பும் ஏற்படாது’’ என்றவர், சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சையினை தற்போது ேராபோடிக் முறை எளிதாக்கியுள்ளதாக கூறினார்.
‘‘இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவதுறை பல வளர்ச்சியனை கண்டுவருகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை மட்டுமில்லாமல் மருந்து, மாத்திரைகள் கூட நோய்களை குணமாக்கும் அளவிற்கு வல்லமையாக மாறிவருகிறது. அதில் குறிப்பாக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரோபோடிக் டெக்னாலஜி. எங்களிடம் சிகிச்சைக்காக வந்த பெண்களில் ஒருவருக்கு சிறுநீரகத்தின் முக்கிய ரத்தக்குழாய் அருகே புற்றுநோய் கட்டி இருந்தது. இதனை நீக்குவதுதான் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.
சிறுநீரகத்தின் செயல்பாடு மற்றும் ரத்தக் குழாயும் பாதிக்காமல் கட்டியினை நீக்க வேண்டும். அதனை ரோபோடிக் உதவியுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் நீக்கினோம். மற்றவருக்கும் இதே முறையினை கையாண்டதால், அவரின் சிறுநீரக திசுக்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது. பொதுவாக இது போன்ற அறுவை சிகிச்சையில் சிறுநீரகத்தை முற்றிலும் நீக்க வேண்டியதாக இருந்து வந்தது. இப்போது உடலில் சிறு ஓட்டைகள் போட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும் அளவிற்கு மருத்துவ துறை வளர்ந்துள்ளது.
இதனால் ஓரிரு நாட்களில் இவர்கள் தங்களின் அன்றாட வேலையில் ஈடுபடலாம். மேலும், ரோபோக்கள் மூலம் மிகவும் துல்லியமான முறையில் கட்டிகளை நீக்குவதால் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாமல் 80% சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும். உடலிலும் பெரிய அளவில் தையலோ அதனால் ஏற்படக்கூடிய தழும்பு இல்லாமல் அறுவை சிகிச்சையினை மேற்ெகாள்ள முடியும்.
புற்றுநோயினை பொறுத்தவரை ஆரம்பநிலையில் கண்டறிந்தால் அதனை எளிதாக குணமாக்க முடியும். மேலும், சிறுநீரகத்தில் ஏற்படும் புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு 1% தான். அதற்காக நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. சிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதம் கழித்து ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து வரச் சொல்வோம். அதனைத் தொடர்ந்து வருடம் ஒருமுறை CT ஸ்கேன் செய்வது நல்லது. பொதுவாக சிறுநீரகத்தில் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், மார்பகப் பகுதியில் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் சிகிச்சையின் போதே அவர்களை முழுமையாக சோதனை செய்துவிடுவோம். இதன் மூலம் உடலில் வேறு உறுப்புகளில் பரவி இருக்கிறதா என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்போம்.
புற்றுநோயின் முதல் காரணம் மரபணு. ரத்தப்பந்த உறவில் உள்ளவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருந்தால், இதன் தாக்கம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், புகைப்பிடித்தல் மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ஒருவர் மாஸ்டர் செக்கப் செய்யும் போது ரத்தப் பரிசோதனை மட்டுமில்லாமல், அனைத்து உறுப்புகளையும் ஆய்வு செய்வது சிறந்தது. இதன் மூலம் ஆரம்பகாலக் கட்டத்திலேயே ேநாயின் தாக்கத்தினை கண்டறிந்து முறையாக சிகிச்சை பெறுவது உயிர் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் அருண்குமார் பாலகிருஷ்ணன்.
தொகுப்பு: நிஷா
