சிலிகுரி வழித்தடத்தை துண்டித்து விடுவதாக மிரட்டல் விடுத்த தேச விரோத சக்திகளுக்கு திரிணாமுல் கட்சி ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிலிகுரி: நாட்டின் எஞ்சிய பகுதிகளை வட கிழக்கு பிராந்தியத்துடன் இணைக்கும் சிலிகுரி வழித்தடத்தை துண்டித்து விடுவதாக மிரட்டல் விடுத்த தேச விரோத சக்திகளுக்கு திரிணாமுல் ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள கவாக்காலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், மேற்கு வங்கத்தில் இருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு நுழைவாயிலாக விளங்கும் சிலிகுரி வழித்தடத்தை பெரிய அளவில் மேம்படுத்த ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் ஒரு தேச விரோத கும்பல் உள்ளது, அது சிலிகுரி வழித்தடத்தை முறித்துவிடுவதாக அச்சுறுத்தியது அவர்கள் வடகிழக்குப் பகுதியை நாட்டிலிருந்து பிரிக்க விரும்பினர். தாஜா செய்யும் அரசியலில் ஈடுபடும் திரிணாமுல் காங்கிரஸ், தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை அத்தகைய கயவர்களுக்கு ஆதரவளிக்கிறது. அதுதான் திரிணாமுல் காங்கிரஸின் உண்மையான முகம்.

இரட்டை என்ஜின் அரசுக்கு வாக்களித்தால் மேற்கு வங்கம் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சியைக் காணும். திரிணாமுல் காங்கிரஸ் தனது 15 ஆண்டு கால ஆட்சியில் மாநிலத்தை அழித்துவிட்டது. மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதை நிறுத்திவிட்டது. அதன் விளைவாக 25 சதவீதத்திற்கும் குறைவான பணிகளே நிறைவடைந்துள்ளன. மதரஸாக்களின் வளர்ச்சிக்காக திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 6,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் வடக்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு போதுமான நிதியை அரசு ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

Related Stories: