போர் பதற்றங்களுக்கு மத்தியில் சவூதிக்கு 18 போர் விமானங்களை அனுப்பியது பாகிஸ்தான் : 13,000 ராணுவ வீரர்களும் பயணம்

சவுதி: மண்டல பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் நாட்டு போர் விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் சவூதி அரேபியாவிற்கு அதிரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா இடையே கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முக்கிய தற்காப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலை இரு நாடுகளுக்குமான தாக்குதலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சமாகும். முன்னதாக, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் சவூதி அரேபிய நிதி அமைச்சர் முகமது அல் ஜடான் இஸ்லாமாபாத் வந்து பல்வேறு நிதியுதவிகளை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மன்னர் அப்துல்அஜிஸ் விமான படைத்தளத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு குழு வந்தடைந்ததை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இதில் 10 முதல் 18 போர் விமானங்கள் மற்றும் சுமார் 13,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நடந்து வந்த போரை நிறுத்த, கடந்த 8ம் தேதி இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைதி பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தற்போது இஸ்லாமாபாத்தில் முன்னின்று நடத்தி வருகிறது.

இந்த சூழலில் சவூதிக்கு போர் விமானங்களை அனுப்பி வைத்தது குறித்து அதிகாரிகள் தரப்பில், ‘ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சவூதியின் எரிசக்தி கட்டமைப்புகளை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் அதே வேளையில், வளைகுடா நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனானில் நிறுத்தாததால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் நீடிக்கிறது.

Related Stories: