கேப் கேனவெரல் : அமெரிக்காவில் புளூ ஆரிஜன் நிறுவனத்தின் நியூ கிளென் ராக்கெட் சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஜெப் பெசோசின் புளூ ஆர்ஜின் நிறுவனம் அதிநவீன விண்கலங்களை உருவாக்கி வருகிறது.இந்நிலையில், புளூ ஆரிஜினின் மிகவும் சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டான நியூ கிளன் ராக்கெட் புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் போது திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது.
புளோரிடா ஏவுதளத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யும் நாசாஸ்பேஸ்பிளைட் வெளியிட்ட காணொலியில், நேற்று முன்தினம் இரவு நியூ கிளன் ராக்கெட் திடீரென தீப்பற்றி எரிந்து, நெருப்புப் பந்தாக வானை நோக்கி வெடித்துச் சிதறியது காட்சியளிக்கிறது. புளூ ஆரிஜின் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்றைய ஹாட்-பயர் சோதனையின் போது ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ஏவுதள ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இதுகுறித்த முழு விபரங்களையும் ஆராய்ந்த பின்னர் கூடுதல் தகவல்களை வெளியிடுவோம்.இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெப் பெசோஸ்,‘‘ விபத்திற்கான மூலக் காரணத்தைக் கண்டறிய இன்னும் சில காலம் ஆகும். இது மிகவும் கடினமான ஒரு நாள், எனினும் எதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமோ அதனைச் செய்து, மீண்டும் பறக்கத் தொடங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
