நியூயார்க்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் ஈரான் உடனான பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதனைதொடர்ந்து விரைவில் ஈரான் -அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதற்கு மாறாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில், ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில், அமெரிக்க ராணுவம் நேற்று அதிகாலையும் புதிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை சுற்றி அச்சுறுத்தலாக இருந்த 4 ஈரானிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்தர் அப்பாஸில் உள்ள ஈரான் தடைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஐந்தாவது டிரோன் ஏவப்பட்ட இருந்த நிலையில், அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தரைக்கட்டுப்பாட்டு மையம் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டை அமெரிக்கா மீறியுள்ளதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் குவைத் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் ராணுவம் அறிவித்துள்ளது.
எந்த இலக்கு குறிவைக்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் விவரங்களை வழங்காமல் குவைத் ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குவைத் ஈரானிடம் இருந்தும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஷியா ஆதரவு குழுக்களிடம் இருந்தும் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
