கோட்டயம்: கோட்டயம் தேர்தல் அதிகாரிகளை மத்திய ஆயுதக்காவல்படை வீரர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வெளியான புகாரை கலெக்டர் நிராகரித்துள்ளார். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்.9 அன்று முடிந்தது. இதில் கோட்டயம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் அங்குள்ள பேசிலியஸ் கல்லூரியில் அமைந்துள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்ற தேர்தல் அதிகாரிகளை நோக்கி மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் துப்பாக்கி காட்டியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதை கோட்டயம் கலெக்டர் சேதன் குமார் மீனா நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேர்தல் அதிகாரிகளை நோக்கி மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் துப்பாக்கி காட்டியதாக வந்த தகவல்கள் அடிப்படையற்றவை. மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சாவிகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்தது. எனவே, பொதுப் பார்வையாளர்களுடன் இணைந்து நானும் நேரில் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தோம். பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கவலைகள் அனைத்தும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில், மிகவும் வெளிப்படையான முறையில் தீர்த்து வைக்கப்பட்டன. எந்தவொரு கட்டத்திலும் விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஊடகச் செய்திகளில் கூறப்பட்டது போல, பாதுகாப்புப் பணியாளர்கள் யாரையும் நோக்கித் துப்பாக்கி காட்டிய சம்பவம் துளியும் நடைபெறவில்லை. சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
