கிருஷ்ணகிரி, ஏப்.8: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை, தேர்தல் செலவின பார்வையாளர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, உள்ளூர் தொலைக்காட்சி ஒளிப்பரப்புகள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஊரக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை, சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் (ஊத்தங்கரை -தனி, பர்கூர்) சந்தோஷ் குமார், (கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி) சதீஷ் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.24 மணி நேரமும் தொலைக்காட்சியில் பதிவுசெய்யும் பணிகள், சமூக வலைதளங்களை கண்காணித்து பதிவு செய்யும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, தேர்தல் செலவின பார்வையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு, தொலைபேசி வாயிலாக வரும் புகார்கள், C-VIGIL APP வாயிலாக வரபெறும் புகார்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வரும் விவரங்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள ஜிபிஆர்எஸ் இணையதளம் மூலம் மாவட்ட முழுவதும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கிருஷ்ணன், தனி தாசில்தார்கள் சம்பத்(தேர்தல்), வெங்கடேசன்(தேர்தல் கட்டுப்பாட்டு அறை) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
