ஓசூர் வட்டார போக்குவரத்து ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஓசூர், ஏப்.7: ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓசூர் -பாகலூர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் அருகில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலராக ஈஸ்வரமூர்த்தி உள்ளார். இவரது அரசு மெயிலுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் தகவலை பதிவிட்டிருந்தனர். அதில், 6ம் தேதி பகல் 12 மணியளவில் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதனை நேற்று காலை 11 மணியளவில் திறந்து பார்த்த வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி திடுக்கிட்டார். இதுகுறித்து நல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், எஸ்ஐ நடராஜன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் நான்கு பேர் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் விரைந்தனர். தொடர்ந்து அலுவலகத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள். மேலும், அலுவலக வளாகத்தில் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பழைய வாகனங்கள், அலுவலக வளாகத்தில் புதர் மண்டிய பகுதிகள், பூங்கா வளாகம், மூங்கில் காடுகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிய வந்தது.இதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி, வேலூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரியவந்துள்ளது. ஓசூர் வட்டார அலுவலகத்திற்கு தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புது வாகனங்கள் பதிவுக்கான வருகின்றன. மேலும், டிரைவிங் பயிற்சி பெற்றவர்கள் 100க்கும் மேற்பட்டோர் லைசன்ஸ் பெறவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: