புதுடெல்லி: இந்திய கிராமங்களில் மேல்மட்டத்தில் உள்ள 10 சதவீதம் பேர் 44 சதவீத நிலங்களை சொந்தமாக வைத்திருப்பதாகவும், 46 சதவீத மக்கள் நிலமற்றவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகம், இந்தியாவில் நில சமத்துவமின்மையின் இயல்பு, வரலாறு மற்றும் சந்தைகள் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதில், கிராமப்புற இந்தியாவில் மேல்மட்டத்தில் உள்ள முதல் 5 சதவீத குடும்பங்கள் 32 சதவீத நிலத்தை சொந்தமாக வைத்திருப்பதாகவும், மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேர் 18 சதவீத நிலத்தை சொந்தமாக வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கட்டுரை 2.7 லட்சம் கிராமங்களில் வசிக்கும் 65 கோடி மக்களை உள்ளடக்கிய நில உரிமை குறித்து இதுவரை தொகுக்கப்பட்ட மிகப்பெரிய தரவு தொகுப்புகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.
இதில், 46 சதவீத கிராமத்தினர் நிலமற்றவர்களாக இருப்பதாகவும், நிலமற்ற குடும்பங்களையும் கணக்கில் கொண்டால், கிராமப்புற நிலத்திற்கான சராசரி ஜினி குறியீடு (நில உரிமையின் சமத்துவமின்மையை 0 முதல் 100 வரையிலான அளவில் அளவிடும் குறியீடு) 71-ஐ எட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தின் மொத்த நிலத்தில் சுமார் 12 சதவீதத்தை மிகப்பெரிய நில உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சில கிராமங்களில் ஒற்றை உரிமையாளர் ஒருவரே மொத்த விவசாய நிலத்தில் பாதி அளவுக்கும் அதிகமானதை சொந்தமாக வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கும் நில சமத்துவமின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. அதாவது, விவசாயத்திற்கு மிகவும் சாதகமான சூழல் கொண்ட கிராமங்களில் நிலம் ஒரு சிலரிடம் குவிந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் வாழும் கிராமங்களில் நிலமற்றோர் விகிதம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு, நீண்டகாலமாக இடதுசாரிக் கட்சிகளால் ஆளப்பட்டு வரும் கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் விதிவிலக்காக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
