சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியலை தீர்மானிக்கும் புதிய வாக்காளர்களின் 14 லட்சம் ஓட்டுகளை பெறப்போவது யார்? என்ற பரபரப்பு நிலவுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வழக்கமான அரசியல் போட்டியை விட, புதிய வாக்காளர்கள் என்ற புதிய சக்தி அரசியல் கட்சிகளுக்கு சோதனை மேடையாக மாறியுள்ளது. 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 14.59 லட்சம் இளைஞர்கள் இந்த முறை முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
இவர்களின் ஓட்டு எந்த திசையில் செல்கிறது என்பது பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடிய முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைபடி, தமிழ்நாட்டில் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,80,30,658 பேரும், பெண்கள் 2,93,04,905 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 7,728 பேரும் அடங்குவர்.
இதில், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர் வாக்காளர்கள் 14,59,039 பேர் புதிய வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 7,62,308 பேரும், பெண்கள் 6,96,632 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 99 பேரும் உள்ளனர். 20 முதல் 29 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தமாக 1,07,18,457 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 54,93,148 பேரும், பெண்கள் 52,22,764 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 2,545 பேரும் அடங்குவர்.
30 முதல் 39 வயது பிரிவில் 1,16,13,490 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 57,49,744 பேரும், பெண்கள் 58,60,998 பேரும் உள்ளனர். இதேபோல், 40 முதல் 49 வயதுகுட்பட்டவர்கள் மொத்தம் 1,19,00,243 பேர் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 61,69,006 பேரும், ஆண் வாக்காளர்கள் 57,29,921 பேரும் உள்ளனர். 50 முதல் 59 வயதுகுட்பட்ட 1,03,83,934 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 49,72,475 பேரும், பெண் வாக்காளர்கள் 54,10,814 பேரும் உள்ளனர். 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களில் மொத்தம் 67,69,737 பேர் உள்ளனர். இதில் பெண்கள் 35,51,790 ஆண்கள் 32,17,690 பேர் உள்ளனர்.
70 முதல் 79 வயதுக்குட்பட்ட 34,35,639 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 16,17,836 பேரும், பெண்கள் 18,17,706 பேரும் உள்ளனர். 80 முதல் 89 வயது பிரிவில் 10,62,752 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 4,87,536 பேரும், பெண்கள் 5,75,195 பேரும் உள்ளனர். இந்த முறை தேர்தலில் இளைஞர்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். 18 முதல் 19 வயதினரை தொடர்ந்து, 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 1.07 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதாவது, இளைஞர்கள் ஒரே நேரத்தில் பெரிய வாக்கு வங்கியாக உருவாகியுள்ளனர்.
வேலைவாய்ப்பு, உயர்கல்வி, தொழில் தொடங்கும் வாய்ப்புகள், டிஜிட்டல் வளர்ச்சி போன்ற இவர்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் இளைஞர்களை கவரும் வகையில் தங்களது பிரசாரங்களை மாற்றி அமைத்து வருகின்றன. மொத்த வாக்காளர்களில் பெண்கள் அதிகமாக இருப்பது, அவர்களை குறிவைத்து அறிவிக்கப்படும் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. குடும்ப நலன், பாதுகாப்பு, கல்வி, சுயநிறைவு போன்ற அம்சங்கள் பெண்கள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது.
30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், இந்த பிரிவு ‘நிலைத்த வாக்கு வங்கி’ என கருதப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டோரில் பெண்கள் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள், ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை கையாளுகின்றன. குறிப்பாக பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், இந்த 14.59 லட்சம் புதிய வாக்காளர்களின் வாக்குகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த தேர்தல் முடிவுகள், வெற்றி பெற்ற கட்சியை மட்டும் நிர்ணயிக்காது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் எந்த திசையில் நகர்கிறது என்பதையும் தீர்மானிக்கும் தேர்தல் ஆகும். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் முடிவு தான் இந்த தேர்தலின் உண்மையான தீர்ப்பாக இருக்கும் என்பது அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
