சென்னை: பல கோடி ரூபாய் சொத்துகளை மறைத்ததாக சுயேச்சை வேட்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக, ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் சுமார் ரூ.197 கோடியும், மனைவி டெய்சி பெயரில் சுமார் ரூ.245 கோடி சொத்தும் உள்ளதாக தெரிவித்து இருந்தார். குறிப்பாக, தனது மனைவி 41 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர்கள் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனர்.
அதுதொடர்பாக இருவேறு புகார் மனுக்கள் வழங்கப்பட்டது.சுயேச்சை வேட்பாளர் முரளி வினோத் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
ஆதவ் அர்ஜுனா தனது வங்கி வைப்புத்தொகையிலிருந்து கிடைக்கும் பெரும் தொகையான வட்டி வருமானத்தை மறைத்துள்ளார். தனது கணக்குகளை தொடங்கிய தேதிகளையும், குறிப்பாக ரூ.14 கோடி வைப்புத்தொகை செய்த தேதியையும் உள்நோக்கத்துடன் மறைத்துள்ளார். இது வாக்காளர்களை ஏமாற்றும் செயலாகும். கையில் உள்ள ரொக்கம் ரூ.1,69,90,582 என்று காட்டியுள்ளார். மேலும் அவரது மனைவி கையில் ரூ.12,22,799 ரொக்கம் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை கையில் வைத்திருப்பது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவே ஆகும். இந்த ரொக்கத்தின் ஆதாரத்தை அவர் மறைத்துள்ளார்.
மேலும், ஆதவ் அர்ஜுனா தனது மனைவியின் பெயரில் உள்ள பின்வரும் நிறுவனங்களின் அசையும் சொத்துகள் இணைப்பு 7ஏ பகுதியில் மறைத்துள்ளார்.மேக்னடிக் ரியல்கான் எல்எல்பி, பெஸ்ட் & கோ டிரேடர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ மெர்ச்சன்டைசர்ஸ் எல்எல்பி, ஓக்வுட் டவுன்ஷிப்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ ஏஜென்சீஸ் எல்எல்பி, அம்பிஷியஸ் ஸ்கைஸ்க்ரேப்பர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ டீலர்ஸ் எல்எல்பி, எமினென்ட் டுவெல்லர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ அசோசியேட்ஸ் எல்எல்பி, பெஸ்ட் அண்ட் கோ டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எல்எல்பி, எலைட் டுவெல்லர்ஸ் எல்எல்பி, ஜெயண்ட் சிட்டி புரோமோட்டர்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ என்டர்பிரைசஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ கேமிங் சொல்யூஷன் எல்எல்பி, ப்ளூம் டுவெல்லர்ஸ் எல்எல்பி, அம்பிஷியஸ் டவுன்ஷிப்ஸ் எல்எல்பி, பெஸ்ட் & கோ கேமிங் டிரேடர்ஸ் எல்எல்பி, குரூவி இன்ஃபிராகாம் எல்எல்பி ஆகிய நிறுவனங்களின் எல்எல்பி மறைக்கப்பட்டுள்ளது.
பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள்: டெய்சி மெர்ச்சன்டைசர்ஸ் பி லிட், மார்ட்டின் பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் பி லிட், மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பி லிட், மார்ட்டின் எலைட் புரோமோட்டர்ஸ் பி லிட், மார்ட்டின் டுவெல்லர்ஸ் பி லிட்,, மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன் பி லிட், மார்ட்டின் ரியல் எஸ்டேட் பி லிட், மார்ட்டின் ரியல்கான் பி லிட், சார்லஸ் புரோமோட்டர்ஸ் பி லிட், டாமினன்ட் ஸ்கைஸ்க்ரேப்பர்ஸ் பி லிட், டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பி லிட், டாமினன்ட் ஹவுசிங் டெவலப்பர்ஸ் பி லிட், டெய்சி டிசைன்ஸ் பி லிட், எக்ஸ்பிளிசிட் பில்டர்ஸ் அண்ட் ஏஜென்சி பி லிட், அரைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் கேபிடல் பி லிட், வின்-ஃபினிட்டி கேமிங் பி லிட், எக்ஸ்பிளிசிட் புரோமோட்டர்ஸ் அண்ட் ஏஜென்சி பி லிட், எக்ஸ்பிளிசிட் பிராபர்ட்டீஸ் அண்ட் ஏஜென்சி பி லிட், எக்ஸ்பிளிசிட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பி லிட்.
மேலும், மார்ட்டின் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ், மார்ட்டின் எலைட் புரொமோட்டர்ஸ், மார்ட்டின் டுவெல்லர்ஸ், மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன், மார்ட்டின் ரியல் எஸ்டேட், டாப்நாட்ச் எஸ்டேட்ஸ் அண்ட் மெர்ச்சன்ட்ஸ், மார்ட்டின் ரியல்கான், சார்லஸ் புரொமோட்டர்ஸ், டாமினன்ட் ஸ்கைஸ்கிராப்பர்ஸ், எக்ஸ்பிளிசிட் பில்டர்ஸ் அண்ட் ஏஜென்சி, எக்ஸ்பிளிசிட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ், டாமினன்ட் ஹவுசிங் டெவலப்பர்ஸ், டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களில் டெய்சி ஆதவ் அர்ஜுனா இயக்குநராக உள்ளார். மேற்கூறிய அசையும் சொத்துகளை அவர் மறைத்துள்ளதால், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
அதேபோல், சுயேச்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் என்பவர் கொடுத்த புகார் மனுவில்,
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 33ஏ மற்றும் பி-ன் படி, ஒரு வேட்பாளர் தனது குற்றப் பின்னணிகள், சொத்துகள் மற்றும் கடன்கள் மற்றும் அவரது துணைவியார் தொடர்பான முழுமையான, சரியான மற்றும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது அவரது கடமையாகும். ஆனால், வேட்பாளரான ஆதவ் அர்ஜுனா, முக்கிய தகவல்களை மறைத்துள்ளார். டெய்சி வைத்திருக்கும் பங்குகள் அவருடைய தனிப்பட்ட சொத்துகள் ஆகும். ஆனால் அவை இன்னும் வெளியிடப்படவில்லை. மார்ட்டின் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 17.7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அமலாக்க இயக்குநரகத்தின் முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேற்கூறிய உண்மைகள் அனைத்தையும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனு படிவங்களில் வேண்டுமென்றே மறைத்துள்ளார். எனவே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட தகுதியானது என கூறியிருந்தார். இதன் காரணமாக, ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு முதலில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
