மாம்பழம் சின்னம் விவகாரம்: மனு தாக்கல் செய்தால் விசாரிப்போம்; ராமதாஸ் தரப்புக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தரப்பு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. உட்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26ம் தேதி உத்தரவிட்டது. அதில், சட்டத்தில் அனுமதி இருந்தால் இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கலாம். அதை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் மகாவீர் சிவாஜி நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் முறையீடு செய்து உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கு, இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: