கோயில் விழாவுக்கு வரிவசூல் செய்வதில் பிரச்னை கிராம மக்கள் சாலைமறியல்

திருமயம், பிப்.19: அரிமளம் அருகே கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினரிடம் வரி வசூல் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் அப்பகுதியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வாழ்றமாணிக்கம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடம் தோறும் திருவிழா நடத்துவது வழக்கம். இதனிடையே கடந்த ஆண்டு திருவிழாவின்போது ஒரு சிலரிடம் விழா கமிட்டியினர் வரி வசூல் செய்யாமல் திருவிழா நடத்தியதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு நடக்கவுள்ள திருவிழாவில் கடந்த ஆண்டு வரிவசூல் செய்யாதவர்கள் தங்களிடம் வரிவசூல் செய்து திருவிழா நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மேலும் திருவிழாவின் போது ஒரு குறிப்பிட்ட நபருக்கு மரியாதை செய்வதை நிறுத்த வேண்டுமென ஒரு தரப்பினர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒரு கட்டத்தில் இருதரப்பு பிரச்சினையாக மாறி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். இதனால் கிராமத்தில் பதட்டம் நிலவி வந்ததால் திருமயம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நேற்று திருமயம் தாலுகா அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில் தாசில்தார் சுரேஷ் இரண்டு தரப்பினரும் அமைதியாக திருவிழா நடத்த ஒப்புக் கொள்ளாத வரையில் திருவிழாவை நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட கிராம மக்கள் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் அறந்தாங்கி-காரைக்குடி நெடுஞ்சாலையில் கே .புதுப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலை மறியல் செய்தனர். அப்போது திருவிழாவை நடத்த அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானம் பேசினர். அதிகாரிகள் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் தொடர்ந்து சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பதட்டம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: