சட்டமன்ற தேர்தல் வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை: கவனிக்கப்படும் முக்கிய அம்சங்கள் என்ன?

நாகர்கோவில்: சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைகின்ற நிலையில், அடுத்த மிக முக்கியக் கட்டமான வேட்புமனுக்கள் பரிசீலனை அந்தந்தத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நாளை (7ம் தேதி) நடைபெறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு நீதிபதிக்கு இணையான அதிகாரத்துடன் இந்தப் பரிசீலனைப் பணிகளை மேற்கொள்வார். இந்தச் செயல்பாட்டின் போது வேட்பாளரின் தகுதி, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது மிகத் தீவிரமாகச் சரிபார்க்கப்படும்.

குறிப்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, வேட்பாளர் தாக்கல் செய்துள்ள படிவம் 26 எனப்படும் பிரமாணப் பத்திரமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இதில் வேட்பாளரின் சொத்து விவரங்கள், கடன் நிலுவைகள், கல்வித் தகுதி மற்றும் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் முழுமையாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிவத்தில் எந்தவொரு கட்டத்தையும் காலியாக விடக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் மிகக் கடுமையான விதியாகும். ஏதேனும் தகவல் இல்லை என்றால் ‘இல்லை’ அல்லது ‘பொருந்தாது’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்; தவறும் பட்சத்தில் அந்த மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

வேட்பாளரின் தகுதிகளைப் பொறுத்தவரை, அவர் இந்தியப் பிரஜையாக இருப்பதும், 25 வயது பூர்த்தியடைந்திருப்பதும் வயதுச் சான்றிதழ்கள் மூலம் உறுதி செய்யப்படும். வேட்பாளர் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால், அவர் வாக்காளராக உள்ள தொகுதியின் வாக்காளர் பட்டியலின் சான்றளிக்கப்பட்ட நகலை இணைத்திருக்க வேண்டும். மேலும், முன்மொழிபவர்களின் எண்ணிக்கை மிக முக்கியமான விதியாகும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிந்தாலே போதுமானது.

ஆனால், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அதே தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டியது கட்டாயமாகும். முன்மொழிபவர்களின் கையொப்பம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அந்த மனுக்கள் செல்லாததாக அறிவிக்கப்படும். இதனுடன், பொதுப் பிரிவினர் ரூ.10,000 மற்றும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.5,000 வைப்புத் தொகையாகச் செலுத்தியதற்கான அசல் ரசீது மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வேட்பாளர் எடுத்துக்கொண்ட உறுதிமொழி ஆகியவையும் சரிபார்க்கப்படும்.

பரிசீலனையின் போது வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் அல்லது முன்மொழிபவர்களில் ஒருவர் மட்டுமே தேர்தல் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்கப்படுவர். மனுவில் உள்ள பெயர்ப் பிழைகள் அல்லது சிறிய தொழில்நுட்பக் குறைபாடுகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருத்த அனுமதிக்கலாம். ஆனால், கையொப்பம் இல்லாமை, போதிய முன்மொழிபவர்கள் இல்லாமை போன்ற ‘அடிப்படை ஆதாரக் குறைபாடுகள்’ இருந்தால் அந்த மனுக்கள் உடனடியாக நிராகரிக்கப்படும். அரசுப் பணியில் இருந்து ஊழல் அல்லது தேசத் துரோகம் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை பெற்று மேல்முறையீட்டில் இடைக்காலத் தடை பெறாதவர்கள் ஆகியோரின் மனுக்களும் விதிகளின்படி நிராகரிக்கப்படும்.

இந்த பரிசீலனை முடிவில் தகுதியான வேட்பாளர்களின் பட்டியல் அந்தந்தத் தேர்தல் அலுவலகங்களில் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 9-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகே இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் களம் முழுவீச்சில் செயல்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி ஸ்டாலின் நேரில் ஆய்வு;
பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்தது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். வேட்பாளர்களுடன் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் தாலுகா அலுவலகம் முன்பு பெருமளவில் திரண்டனர். தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் இடத்திலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் தொண்டர்கள் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும், தொண்டர்கள் கலைந்து செல்வதும், மீண்டும் அலுவலகம் நோக்கி வருவதுமாக இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதை கட்டுக்குள் கொண்டுவர கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும், பாதுகாப்புப் பணியில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது என்றும் அங்குள்ள அதிகாரிகள், போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Related Stories: