பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 11வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன் குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் நாட் அவுட்டாக 25 பந்தில் 3 பவுண்டரி, 8 சிக்சருடன் 70, கேப்டன் ரஜத் படிதார் 19 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 48 ரன் அடித்தனர். தேவ்தத் படிக்கல் 50, கோஹ்லி 28, பில் சால்ட் 46 ரன் அடித்துஅவுட் ஆகினர்.
பின்னர் களம் இறங்கிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் 7, சஞ்சு சாம்சன் 9, ஆயுஷ் மத்ரே 1, கார்த்திக் சர்மா 6, சிவம் துபே 18, பிரசாந்த்வீர் 43 (29 பந்து), ஜேமி ஓவர்டன் 37 (14 பந்து) ரன்னில் அவுட்ஆகினர். அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான், 25 பந்தில் 50 ரன் அடித்தார். 19.4ஓவரில் 207 ரன்னுக்கு சிஎஸ்கே ஆல்அவுட் ஆனது. இதனால் 43 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் புவனேஸ்வர்குமார் 3, ஜேக்கப் டஃபி , குருணல் பாண்டியா, அபிநந்தன் சிங் தலா 2 விக்கெட் எடுத்தனர். டிம் டேவிட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்கு பின்னர் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது: தொடக்கத்தில் பந்து சற்று நின்று வந்தாலும் பிலிப் சால்ட், விராட் ஆடிய விதம் மிகச்சிறப்பானது. அவர்கள் அமைத்த அடித்தளத்திற்கு பின், எங்கள் வீரர்கள் அடித்த சிக்சர்களை மிகவும் ரசித்தேன். டிம் டேவிட் ஒரு ஸ்பெஷலிஸ்ட் வீரர். நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த பினிஷர் அவர் தான், என்றார். பந்துவீச்சு வியூகம் குறித்து விளக்கிய படிதார், டஃபி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களை வலுவான நிலையில் அமர வைத்தது. நான் எப்போதெல்லாம் அழுத்தத்தில் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் க்ருணால் பாண்டியாவை தான் தேடுவேன். அவர் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. சுயாஷ் 4 ஓவர்களை வீசிய விதம் அற்புதமாக இருந்தது. டெத் ஓவர்களில் புவனேஷ்வர், அபிநந்தன் சிங் வீசிய யார்க்கர்கள் பார்க்கவே மிக அழகாக இருந்தது. அணியில் அனைவரும் நல்ல மனநிலையில் உள்ளனர். அடுத்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
டிகே-வுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி;
ஆட்டநாயகன் டிம் டேவிட், கூறுகையில், எனது ஆட்டம் குறித்து மிகவும் மகிழ்ச்சி, இது எப்போதும் இப்படி நடப்பதில்லை. எனக்குப் பின்னால் ஜிதேஷும் ஷெப்பர்டும் இருக்க, அவர்களுக்கு முன் பேட் செய்யக் களமிறங்குவது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.பயிற்சியாளர் டிகே-வுடன்(தினேஷ்கார்த்திக்) பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இதுபோன்ற சூழ்நிலைகளில் அனுபவம் வாய்ந்த வீரர், என்றார்.
தோல்விக்கு நிச்சயம் நான் தான் காரணம்!
ஹாட்ரிக் தோல்விக்கு பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியதாவது: மோசமாக தொடக்கத்திற்கு பிறகும், 200 ரன்னை தாண்டியது உண்மையிலே ஆச்சரியமாக இருக்கிறது. சர்பராஸ்,ஓவர்டன், பிரசாந்த் வீர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நான் மட்டும் கொஞ்சம் பேட்டிங்கில் பங்களித்து இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். எனவே இந்த தோல்விக்கு நிச்சயம் நான் தான் காரணம். டிம் டேவிட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பவர் பிளேவில் சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும். 14வது ஓவர் வரை கட்டுக்கோப்பாகத்தான் பந்து வீசினோம். அதன் பிறகு தான் போட்டி எங்கள் கையை விட்டு நழுவி சென்று விட்டது, என்றார்.
பிட்ஸ்.. பிட்ஸ்..
* ஐபிஎல்லில் ஆர்சிபி 36வது முறையாக 200 பிளஸ் ரன் எடுத்துள்ளது. சிஎஸ்கே 37 முறை 200 பிளஸ் ரன்னுடன் முதலிடத்தில் உள்ளது.
* சிஎஸ்கேவுக்கு எதிராக ஆர்சிபி 2008-21ம் ஆண்டுவரை 16 போட்டியில் 5ல் வெற்றி, 11ல் தோல்வி கண்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு முதல் 6 போட்டியில் 5ல் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது.
* சிஎஸ்கேவுக்கு எதிராக ஆர்சிபி தொடர்ச்சியாக 4 போட்டியில் வென்றுள்ளது. மும்பை( 2018-19), பஞ்சாப்( 2021-24) தொடர்ச்சியாக 5ல் வென்றுள்ளன.
* ஐபிஎல் சீசனின் முதல்3 போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியடைந்தது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2022ல் முதல் 4 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
