ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 10வது போட்டி, ஐதராபாத்தில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. அதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் எடுக்காமல் அவுட்டானார். 3வது ஓவரில் ஹெட், 7 ரன்னில் வீழ்ந்தார்.
அவரைத் தொடர்ந்து 4வது ஓவரில் கேப்டன் இஷான் கிஷண் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 8வது ஓவரில் லியாம் லிவிங்ஸ்டோன் (14 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். 26 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு ஹென்றிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி இணை சேர்ந்து அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை, 116 ரன்கள் குவித்த நிலையில், நிதிஷ் குமார் (33 பந்து, 5 சிக்சர், 3 பவுண்டரி, 56 ரன்) அவுட்டானார். அடுத்த ஓவரில் கிளாசனும் (41 பந்து, 2 சிக்சர், 5 பவுண்டரி) வீழ்ந்தார்.
20 ஓவரில் சன்ரைசர்ஸ், 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 157 ரன் இலக்குடன் லக்னோ துவக்க வீரர்களாக அய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். 5வது ஓவரை வீசிய ஈஷன் மலிங்கா பந்தில் மார்ஷ் (14 ரன்) அவுட்டானார். அவரைத் தொடர்ந்து 10வது ஓவரில் மார்க்ரம் (45 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின், ஆயுஷ் படோனி 12, நிகோலஸ் பூரன் 1, அப்துல் சமத் 16 ரன்னுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர்.
இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு ஆடிய கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 68 ரன் எடுத்தார். கடைசி ஓவர்களில் சன்ரைசர்ஸ் வீரர்கள் சிறப்பாக பந்து வீசியதால் ரன் வேகம் குறைந்தது. அதனால், 19.5 ஓவரில் ஒரு பந்து மீதமிருக்கையில், லக்னோ, 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
