அதிமுக வேட்பாளர் கல்லூரியில் 8 மணி நேரம் ஐடி திடீர் ரெய்டு: திருச்சியில் பரபரப்பு

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் 8 மணி நேரம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மணிகண்டம் அருகே திருச்சி-மதுரை சாலையில் உள்ளது. இந்த கல்லூரிக்கு நேற்று மாலை 3.45 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அடங்கிய குழுவினர் 10க்கும் மேற்பட்டோர் 3 கார்களில் திடீரென வந்தனர்.

இதையடுத்து கல்லூரி நுழைவு கேட் மூடப்பட்டது. அப்போது அங்கு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்களை எங்கும் செல்லக் கூடாது எனக்கூறி அங்கேயே அமர வைத்தனர். ஞாயிற்று கிழமையான விடுமுறை தினத்திலும் அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர்களின் செல்போன்களை வாங்கிக்கொண்ட அக்குழுவினர், கல்லூரியை சேர்ந்த மேலும் சிலரை போன் மூலம் பேசி வரவழைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த 15க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களையும் வெளியில் விட அனுமதிக்காததால் அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த 15 பேர் உட்பட கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வெளியே செல்ல அனுமதித்தனர்.

தொடர்ந்து கல்லூரி அலுவலகம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வெளியில் இருந்து இரவு உணவு கொண்டு செல்லப்பட்டது. இந்த சோதனை இரவு 11.30 மணி வரை நடந்தது. லட்சக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அதிமுக வேட்பாளரின் கல்லூரியில் 8 மணி நேரம் ரெய்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: