குளித்தலை பெரியபாலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் திடீரென தனது வலிப்பு ஏற்பட்ட நிலையிலும், தான் இயக்கி வந்த பேருந்தை லாவகமாக நிறுத்தி குறிப்பிட்ட பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரை காப்பற்றி பலரையும் நெகிழ வைத்து உள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலத்தில் போலீசார் அணிவகுப்பு பேரணிக்கு தயார் நிலையில் இருந்தனர். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தை இயக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட அந்த அரசு பேருந்து ஓட்டுநர், தனக்கு ஏற்பட்ட வலிப்பு மிகவும் தீவிரமாகும் முன்பே தான் இயக்கி வந்த பேருந்தை பழத்தில் பாதுகாப்பாக ஓரம்கட்டி நிறுத்தினார். ஓட்டுனரின் நிலையை கண்டு கூச்சலிட்ட பயணிகளின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டுநரை பேருந்தில் இருந்து கீழே இறக்கிய போலீசார், அவருக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குறிப்பிட்ட பேருந்தில் வந்த பயணிகளை மாற்று பேருந்து மூலம் அவர்கள் செல்லும் இடங்களுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
எதிர்பாராமல் வலிப்பு நோய் வந்த போதும் லாவகமாக பேருந்தை நிறுத்தி தங்களை பாதுகாத்த அரசு பேருந்து ஓட்டுனரை, அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வெகுவாக பாராட்டினர். திடீரென வலிப்பால் பாதிக்கப்பட்டாலும் பயணிகளின் உயிரை காப்பாற்ற முக்கியத்துவம் கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் பெயர் வெங்கடாஜலபதி என தெரிய வந்துள்ளது. இவர் சுதாரித்து பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று பயணிகள் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
