சென்னை: தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் தொடர்பான வீடு மற்றும் அவரது தங்கும் விடுதிகள், அலுவலகங்கள் என 10 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் ேததி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்வது தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் பெரிய அளவில் பணப் பரிமாற்றம் ெசய்ததாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வசித்து வரும் பட்டினப்பாக்கத்தில் உள்ள வீடு, அண்ணாசாலையில் உள்ள அவரது ஜேஎஸ்எம் தங்கும் விடுதி, எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் உதவியுடன் காலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனையில் கைப்பற்றியது தொடர்பாக எந்த தகவல்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. சோதனைக்கு பிறகு தான் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
தற்போது சோதனை நடந்து வரும் ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருள் மூலப்பொருட்கள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும், ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
