மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் வடக்கு பகுதி கடற்கரையில் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட 4 கைகளுடன் கூடிய அம்மன் சிலை ஒன்று நேற்று மாலை திடீரென கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த, சுற்றுலாப் பயணிகள் கடலோர காவல் படைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர காவல் படை போலீசார், கரை ஒதுங்கி கிடந்த அம்மன் சிலையை அதிரடியாக மீட்டனர்.

அப்போது, கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பலர் கரை ஒதுங்கிய அம்மன் சிலையை தங்களது செல்போனில் ஆர்வமாக புகைப்படம் எடுத்தனர். சிலர் அச்சிலை அருகில் அமர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டனர். மாமல்லபுரம் கடற்கரையில் திடீரென அம்மன் சிலை கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சிலை பழங்கால சிலைபோல் தெரியவில்லை எனவும், யாரோ இந்த புதிய அம்மன் சிலையை சமீபத்தில் கொண்டு வந்து கடலில் போட்டிருக்கலாம் எனவும் சிற்பிகள் கூறினர்.

Related Stories: