அசாம் முதல்வர் மனைவியிடம் 3 வெளிநாடுகளின் பாஸ்போர்ட்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ள சூழலில், டெல்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா கூறியதாவது: அசாம் பாஜ அரசின் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா, ஐக்கிய அரபு அமீரகம், ஆன்டிகுவா மற்றும் பார்புடா, மற்றும் எகிப்து ஆகிய மூன்று நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளார். துபாயில் அவருக்கு இரண்டு சொத்துக்கள் உள்ளன. ஆனால், தேர்தலில் போட்டியிடும் முதல்வர், தனது பிரமாணப் பத்திரத்தில் இந்த விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.

அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது முறைகேடாகப் பணத்தைச் சேமிக்க உருவாக்கப்பட்ட ‘ஷெல்’ நிறுவனம் ஆகும். தவறான தகவல்களை அளித்ததற்காக முதல்வரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு பவன் கேரா கூறினார்.

மறுப்பு: காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாகக் கண்டித்துள்ள முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, இவை அனைத்தும் ‘‘டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்ட” போலி ஆவணங்கள் என்று தெரிவித்துள்ளார். முதல்வர் சர்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ”தோல்வி பயத்தில் காங்கிரஸ் கட்சி இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறது. என் மீதும் என் மனைவி மீதும் சுமத்தப்பட்டுள்ள புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. இதற்காக பவன் கேரா மீது அடுத்த 48 மணி நேரத்திற்குள் சிவில் மற்றும் குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப்படும்.

அவர் சிறைக்குச் செல்வது உறுதி.” முதல்வரின் மனைவி ரினிகி புயான் சர்மா கூறுகையில்: ‘‘ஒரு தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அடிப்படைச் சரிபார்ப்பைக் கூட செய்யாமல், போலியாக உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் படங்களை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சட்டப்படி இதை நான் எதிர்கொள்வேன்,” என்று தெரிவித்துள்ளார். அஸ்ஸாமில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே எழுந்துள்ள இந்தப் பாஸ்போர்ட் விவகாரம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: