லாகூர்: ‘எதிர்காலத்தில் இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு தவறான முயற்சிகளுக்கும் கொல்கத்தாவில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கப்படும்’ என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு ஆசியா போர் சூழலை பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களை தீட்டினால், இந்தியா முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், லாகூர் அருகே தனது சொந்த ஊரான சியால்கோட்டில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘‘தீவிரவாதிகள் இந்த செயல்களை செய்தார்கள்’ என்று கூறி, எங்கோ சில உடல்களை வைத்து விட்டு, தங்கள் சொந்த ஆட்கள் மூலமாகவோ அல்லது சிறையில் உள்ள பாகிஸ்தானியர்கள் மூலமாகவோ ஒரு போலித் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த முறை இந்தியா ஏதேனும் போலித் தாக்குதல் நடத்த முயன்றால் நாங்கள் கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம்’’ என மிரட்டி உள்ளார். ஆனால் இந்தியா சதி செய்வதாக கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை.
