சேலம்: சேலத்தில் அதிமுக வேட்பாளருக்கு செருப்பை சுமந்து கொண்டு வந்த உதவியாளரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நாளை (திங்கள்) வேட்புமனு தாக்கல் செய்கிறார். சேலம் தெற்கு தொகுதியில் வேட்பாளர் வினோத், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியின் பொறுப்பாளராக மொரப்பூர் மாஜி எம்எல்ஏ சிங்காரம் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவருக்கு எதிராக சிட்டிங் எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் மற்றும் மாஜி எம்எல்ஏக்கள், ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து பொறுப்பாளர் பதவியில் இருந்து ஓரம்கட்டிவிட்டனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதிகபடியான கூட்டத்தை கூட்டியே ஆக வேண்டும் என்பதால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டோர்களை ஒருங்கிணைத்து கூட்டத்தை கூட்டி எதிர்கோஷ்டிக்கு பதிலடி கொடுத்துள்ளனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வினோத், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்தார்.
மனு தாக்கல் செய்யும் போது அவர் செருப்பு அணியவில்லை. அதன்பிறகு அவரது உதவியாளர் ஒருவர் செருப்பை கையில் தூக்கி கொண்டு உள்ளே ஓடிவந்தார். அவரை கேட்டில் நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். வேட்பாளருக்கு செருப்பை கொண்டு போறேன் என்றதால் அவரை உள்ளே விட்டனர். கேரி பேக்கில் சுற்றிய செருப்பை பவ்யமாக எடுத்துப்போட அதனை வேட்பாளர் வினோத் காலில் போட்டுக்கொண்டு சென்றார்.
