பொள்ளாச்சி கதறல் இன்னும் காதில் ஒலிக்கிறது பெண்கள் பாதுகாப்பை பேச அருகதை இல்லை: எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

ஈரோடு: பொள்ளாச்சி இளம்பெண்கள் கதறல் இன்னும் காதில் ஒலிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை. பெண் எஸ்.பி.க்கு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்தது எந்த ஆட்சி? பெண் ஐஏஎஸ் மீது ஆசிட் வீசப்பட்டது எந்த ஆட்சி என்று ஈரோடு பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஈரோடு திண்டல் அருகே நேற்று காலை ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி, பெருந்துறை திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம், கோபிச்செட்டிபாளையம் திமுக வேட்பாளர் நல்லசிவம், பவானி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஏ.சேகர் என்கிற சந்திரசேகர், அந்தியூர் திமுக வேட்பாளர் சிவபாலன் மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிடும் மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரம், ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மகளிரின் உயர்வுக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் நாம் எடுத்திருக்கும் முன்னெடுப்புகள், பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. குழந்தை திருமணம், குழந்தை பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, பாலின வள மையங்களை உருவாக்கி இருக்கிறோம்.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். டிஜிட்டல் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகள் கொடுக்கும் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். ஒரு குற்றம் நடந்தால் – எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை தண்டிக்கிறோம் என்பதில்தான், ஒரு அரசின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது. அப்படி பார்த்தால், 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான். இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்வது, நம்முடைய தமிழ்நாட்டில்தான். இங்கு, சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்கிறது; பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதனால்தான், தைரியமாக வேலைக்கு செல்கிறார்கள்.

பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு ‘பொள்ளாச்சியே சாட்சி’ என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் சொன்னது. “அண்ணா அடிக்காதீங்க… அண்ணா வலிக்குது…” என்று அப்பாவி இளம்பெண்கள் கண்ணீருடன் கதறியது இப்போதும் நம்முடைய காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த கதறல்கூட பழனிசாமியின் மனசாட்சியை உலுக்கவில்லையா…? பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எப்படிப்பட்ட நாடகங்களையெல்லாம் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி….? முதலில் வழக்கு போடாமல் இழுத்தடித்தார்… பிறகு, சம்பந்தப்பட்ட குற்றவாளியை தப்பிக்க விட்டார். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை பொதுவெளியில் சொல்லி, மிரட்டல் விடுத்தார்கள். ஆனால், அந்த வழக்கையும் முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கி தந்து, 85 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் வாங்கி தந்தது இந்த திராவிட மாடல் ஆட்சிதான்.

பொள்ளாச்சி வழக்கு மட்டுமா? ஒரு பெண் எஸ்.பிக்கே பாலியல் தொல்லை கொடுத்தனர். அந்த டிஜிபியை பாதுகாத்தது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிதானே? அந்த பெண் எஸ்.பி.யை வழிமறித்து, ஒரு டிஜிபியே மிரட்டியது பழனிசாமி ஆட்சியில்தானே? இந்த வழக்கில்கூட தண்டனை வாங்கிக்கொடுத்தது நம்முடைய ஆட்சியில்தான். இது மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும், அதிமுக ஆட்சிக்கும் பெரிய ஹிஸ்டரியே இருக்கிறது. தர்மபுரியில் பேருந்தில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்களே… பெண் ஐஏஎஸ் மீது ஆசிட் வீச்சு என்று பெண்களுக்கு எதிராக அதிமுகவினர் செய்த படுபாதகங்களை பெரிய லிஸ்ட்டே போடலாம்.

ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனையே கொடுக்கும் அளவிற்கு சட்டங்களை நிறைவேற்றியிருப்பது நம்முடைய ஆட்சிதான். பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். பெண்களை பாதுகாத்து கல்லூரிகளுக்கும் – வேலைகளுக்கும் அனுப்பி தலைநிமிர வைத்து, உற்ற தோழனாக இருப்பது திராவிட மாடல் ஆட்சியில். இந்த உண்மைகளை எல்லாம், பொய் செய்திகளையும் – அவதூறுகளையும் பரப்பி மறைக்கலாம், திசைதிருப்பலாம் என்று கருதி, பாஜகவின் என்.டி.ஏ. ஆட்சியை கொண்டுவந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்துவிடலாம் என்று கற்பனை கோட்டையில் மிதக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* நம்மிடம் சாதனை லிஸ்ட் அவர்களிடம் துரோக லிஸ்ட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தன்னுடைய அரசின் சாதனைகள் என்று சொல்ல, எடப்பாடி பழனிசாமியிடம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு எலக்‌ஷன் டூர் வரும் பிரதமரிடமும் எதுவும் இல்லை. நம்மிடம் நமது சாதனை லிஸ்ட்டும் உள்ளது. அவர்களது துரோக லிஸ்ட்-ம் இருக்கிறது.அவர்களது துரோக லிஸ்ட்டை சொல்லட்டுமா…? நீட் துரோகம், மெட்ரோ ரயில் திட்டங்களை தராமல் அமுக்கிய துரோகம், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழித்த துரோகம், சிறுபான்மையினருக்கு சி.ஏ.ஏ. துரோகம், விவசாயிகளுக்கு வேளாண் சட்ட துரோகம், அமெரிக்க வரி விதிப்பில் நெசவாளர்களை காப்பாற்ற தவறிய துரோகம், மேற்காசிய போரில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை முடங்க வைத்திருக்கும் துரோகம்! இந்தி மொழியைத் திணிக்க, நம்முடைய குழந்தைகளுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியைத் தராத துரோகம்! ஜி.எஸ்.டி இழப்பீடு தராத துரோகம், மாநில உரிமைகளை பறிக்கும் துரோகம், இவ்வாறு துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான் எடப்பாடி பழனிசாமி’’ என்றார்.

* ஒரு குற்றம் நடந்தால் – எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை தண்டிக்கிறோம் என்பதில்தான், ஒரு அரசின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது. அப்படி பார்த்தால், 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான்.
* பெண் எஸ்.பி.க்கு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்தது எந்த ஆட்சி?
* பெண் ஐஏஎஸ் மீது ஆசிட் வீசப்பட்டது எந்த ஆட்சி

* மொத்த ஊழல் கூட்டமும் ஒன்னா இருக்கு…
‘‘என்.டி.ஏ. கூட்டணியை பாருங்கள். 2016-ல் அமித்ஷா என்ன சொன்னார்? அதிமுக அமைச்சரவை தான் ஊழல்வாதிகள் நிறைந்த அமைச்சரவை என்று சொன்னார். ஆனால், அந்த ஊழல்கூட்டம் மொத்தமும் இப்போது அதே அமித்ஷாவுடன் நிற்கிறது. சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த பழனிசாமி தொடங்கி, அவருடன் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஊழல் குற்றவாளிகள் என்பதற்கு உதாரணம் ஒன்றா? இரண்டா? குட்கா குற்றவாளி – உள்ளாட்சி டெண்டர் குற்றவாளி – இப்படி ஒரு டஜன் அதிமுக முன்னாள் அமைச்சர்களை சொல்லலாம். அவர்கள் மட்டுமல்ல… அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களை பாருங்கள். ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்கும் வழக்கில் சிக்கியவர். இன்னொருவர் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கொடுப்பதில் மாட்டியவர். உதிரிகளை பற்றியெல்லாம் நான் சொல்ல வேண்டுமா? இப்படி குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்கள் கூட்டணியாக வந்து, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* பாஜ கிளை செயலாளர் எடப்பாடிக்கு வயிறு எரியுது
‘‘தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி, பாஜவின் கிளை செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சலை தருகிறது; வயிறு எரிகிறது. அவரது எண்ணஓட்டம் என்ன தெரியுமா? “என்னடா, கால்களில் தவழ்ந்து, கால்களை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த திமுகவும் – மு.க.ஸ்டாலினும் ஒரு தேர்தலில்கூட வெற்றிபெற விடமாட்டேன் என்கிறார்கள்’’ என்ற பொறாமையில், பொய்யையும் – புரளியையும் பரப்புகிறார்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* கோவையில் முதல்வர் 6 கி.மீ ரோடு ஷோ
கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, கோவை வடக்கு துரை செந்தமிழ்செல்வன், சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர், கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர், மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம், சூலூர் தொகுதி தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் என்.ஆர்.கார்த்திகேயன், கிணத்துக்கடவு சபரி கார்த்திகேயன், பொள்ளாச்சி தொகுதி கொமதேக வேட்பாளர் நித்யானந்தம், வால்பாறை சுதாகர் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து, அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

முன்னதாக கோவை சின்னியம்பாளையத்தில் இருந்து நேற்று மாலை திறந்த வேனில் நின்று கை அசைத்தவாறு ரோடு ஷோ-வில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவிநாசி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், முதல்வரை வரவேற்று மேளம், தாளம் முழங்க, உற்சாக கோஷமிட்டனர். சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக மக்கள் கூடியிருந்து வரவேற்பளித்தனர். சுமார் 6 கி. மீ தூரம் முதல்வர் ரோடு ஷோ நடத்தினார். இதில் தொண்டர்கள் கருப்பு _ சிவப்பு பலூனை பறக்கவிட்டு ஆர்ப்பரித்தனர். இளம்பெண்கள், தொண்டர்கள் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: