மதுரை, ஏப். 3: கிறிஸ்தவர்கள் கடந்த பிப்.18ம் தேதி சாம்பல் புதன் தினம் தொடங்கி தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி இறுதி புனித வாரத்திற்கான குறுத்தோலை ஞாயிறு கடந்த மார்ச் 29ல் நடந்தது. இதன்படி நேற்று புனித வியாழன் கடைபிடிக்கப்பட்டது.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய தினம், அவரது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டதை நினைவு கூறும் வகையில், மதுரையில் உள்ள தேவாலயங்களில் தலா 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பாதங்களை பங்கு தந்தையர்கள், போதகர்கள் கழுவி முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஏப்.3) புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடு மற்றும் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
