சென்னை: சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 31ம் தேதி மற்றும் நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று காலையில் இருந்து தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் என்பது விறுவிறுப்பாக நடந்தது. திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நேற்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் சுகந்தியிடம் அளித்தார். அப்போது வழக்கறிஞர்கள் என். ஆர்.இளங்கோவன், சரவணன், பகுதி செயலாளர் மதன் மோகன், காங்கரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் சிவ ராஜ சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய வந்த உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து குமார் 500 மீட்டர் முன்பாகவே காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் அவர் தனது தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெறுவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவார், முதல்வர் ஆவார்’’ என்றார்.
