ஒரு இலை செத்துருச்சு… இன்னொரு இலை அமித்ஷா மார்வாடி கடைக்கு அடமானத்திற்கு போயிடுச்சு… முடிச்சு விட்ட கருணாஸ்

சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் கருணாஸ் பேசியதாவது: சிவகங்கை தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக நான் இருப்பேன் என உறுதி கூறுகிறேன். தாமரை மலருக்கு கீழே இரட்டை இலை படுத்து தூங்கி கொண்டிருக்கிறது. இரட்டை இலையில் ஒரு இலை பாஜவிடம் சென்று விட்டது. அமித்ஷா என்ற மார்வாடி கடையிடம் அடமானத்திற்கு போய் விட்டது. ஒரு இலை இத்துப்போன ஒருவரிடத்தில் இருக்கிறது. அந்த ஒத்த இலையும் செத்த இலையாகி விட்டது. நான் சண்டை செய்ய வரவில்லை. அதிமுக எம்எல்ஏ செய்யத் தவறிய நலத்திட்டங்களை செய்ய வந்திருக்கிறேன். அனைத்து திட்டங்களையும் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த வளர்ச்சியடைந்த தொகுதியாக சிவகங்கை தொகுதி மாறும். இவ்வாறு பேசினார்.

* வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பெரம்பலூர் நாதக பெண் வேட்பாளர் திடீர் மாற்றம்
பெரம்பலூர் (தனி) தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி, கடந்த 30ம் தேதி கட்சி சின்னமான ஏர் கலப்பையுடன் நெற்கதிர்களுடன் ஊர்வலமாக சென்று பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று (2ம்தேதி) பெரம்பலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சுகன்யா, என்பவர் கட்சியினருடன் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்து முடித்துவிட்டு வெளியே வந்த வேட்பாளர் சுகன்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அண்ணன் சீமான் உத்தரவின் படி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த தகவலை அண்ணன் சீமானிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன்’’ என்றார். இந்த திடீர் மாற்றத்தால் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வாய்ப்பை இழந்த ஜான்சி ராணியின் ஆதரவாளர்கள் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Related Stories: