மிக்ஸி, கிரைண்டரில் எடப்பாடி தலைய வச்சுதான் அரைக்கணும்: பங்கம் செய்த சீமான்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகை மற்றும் கூடலூர் ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குன்னூரில் நேற்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஹெலிகாப்டர், அதற்குத் தேவையான எரிபொருள், மொட்டை மாடியில் தரையிறங்கும் வசதி என சில பொய்யான வாக்குறுதிகள் என்னாலும் கொடுக்க முடியும். பெண்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைரம் தருவதாகவும் போலி விளம்பரம் செய்யலாம். ஆனால் இதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை அரசியல்வாதிகள் தருகின்றனர். அதில் அரைக்க பொருட்கள் இல்லையெனில் அதற்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியின் தலையை வைத்து தான் அரைக்க வேண்டும்.

திரையில் நடிகனைப் பார்த்து விசில் அடித்தவர்கள் இன்று தெருவில் நின்று விசில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு கூறும் விஜய்யே, தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். தவெக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையைச் செயல்படுத்த மாதம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், இதற்கு கடன் மட்டுமே வாங்க முடியும். இந்த நிலை நீடித்தால் இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரப் பஞ்சம் தமிழ்நாட்டிலும் வரும். சிபிஐ விசாரணைக்குச் சென்றபோது கூட பாஜவை பற்றி ஒரு வார்த்தை பேசாத அளவுக்குப் பயம் உள்ளவர்கள் அரசியல் களத்திற்கு வரக்கூடாது. “Y பிரிவு’’ பாதுகாப்பு பெறுபவர்கள் எப்படி மக்களைப் பாதுகாப்பார்கள். இவ்வாறு பேசினார்.

* வடக்கு எது, தெற்கு எதுன்னு தெரியுமா? தலைநகரகாரருக்கு தூங்காநகரத்துல என்ன வேலை? சுந்தர்.சியை சுத்தி அடிக்கும் ‘கூட்டணி’
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி, தவெக சார்பில் முஸ்தபா, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் ஹக்கீம் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய நீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சுந்தர்.சி. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை வந்தார்.

ரிங் ரோட்டில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கியுள்ள அவர் மதுரையில் உள்ள கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளான செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். மேலும், அவருக்கு என கட்சி அலுவலகம், பிரசார வாகனம், முக்கிய நிர்வாகிகள், மத்திய தொகுதியில் எந்த எந்த பகுதிகள் உள்ளன? யாரை எல்லாம் பிரசாரத்திற்கு அழைத்து வரவேண்டும் என முடிவு செய்து பின்னர் தான் மதுரை மத்திய தொகுதியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட முடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், மதுரை வடக்கை குறி வைத்து வேலை பார்த்த அதிமுகவின் சீனியர்கள் சிலருக்கு சுந்தர்.சியை ஏற்றுக் கொள்ள மனமில்லை. இதனால் பிரசாரத்தை தவிர்ப்பது என்ற முடிவில் உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘மதுரை அதிமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது, சென்னையை சுற்றி சுற்றி வரும் ஒருத்தருக்கு சீட் தருவதை ஏற்க முடியாது. நாங்க கொதிச்சு போயிருக்கோம். அவருக்கு மதுரையிலே வடக்கு எதுன்னு தெரியுமா? தெற்கு எதுன்னு தெரியுமா? எங்ேக போய் எப்படி பிரசாரம் செய்றதுன்னு கூட தெரியாது. அவரை கூட்டிக்கிட்டு நாங்கள் எங்கே போய் என்ன சொல்லி கேட்போம். இதுல அவர் டைரக்‌ஷன்ல பீக்ல இருக்காரு… ரஜினி, கமல் பட வாய்ப்பை விட்டுட்டு, கேரியர் உச்சத்தை உதறிட்டு வர்றாருன்னு பில்டப் வேற தர்றாங்க… என்ன சொல்றது? செய்றதுன்னு தெரியலை’’ என்றனர்.

இதுகுறித்து தமாகா தொண்டர்கள் கூறுகையில், ‘‘மதுரை மத்திய தொகுதியில் பல வருடம் குடியிருந்து வரும் தமாகாவை சேர்ந்த எங்களுக்கு மத்திய தொகுதி கேட்டும், கூட்டணியில் ஒதுக்கீடு செய்யாமல் சென்னையை சேர்ந்த இயக்குநருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை மட்டும் இல்லை, தென் மாவட்டத்திலேயே புதிய நீதி கட்சிக்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இல்லை. கூட்டணி கட்சியினரும் ஒத்துழைப்பு இல்லை. கண்களை கட்டி காட்டில் விட்டது போல, மத்திய தொகுதி வேட்பாளராக சுந்தர்.சி. தொகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளார். மதுரையை சுத்துற நாங்களே தொகுதி மாறி ஓட்டு கேட்டு அசிங்கப்பட்டிருக்கோம். தலைநகரம் எடுத்தவரு, தூங்கா நகரத்துல வந்து என்ன செய்யப் போறாருன்னு தெரியலை…’’ என்றனர்.

Related Stories: