- பாஜக
- Edapadi
- கவர்னர்…
- கனிமோஜி கலை
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- கனிமொழி எம்.பி.
- Keeladi
- திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்
- ஓபன் ஏர் மியூசிய
- Thiruppuvanam
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தனது பிரசார பயணத்தை நேற்று துவக்கினார். முதலில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து திருப்புவனம் சந்தை திடலில் வேனில் நின்றபடி மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அவர் பேசியதாவது: கீழடி தமிழர்களின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றிய இடம். அது நமது அடையாளம். நமது தாய்மடியிலிருந்து பிரசாரத்தை துவங்குவதாக முதல்வரிடம் தெரிவித்தேன். இன்று நமது தேர்தல் அறிக்கையை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். அந்த தேர்தல் அறிக்கை குழுவில் தமிழரசியும் இடம் பெற வேண்டும் என முதல்வர் விரும்பி நியமித்தார்.
தேர்தல் அறிக்கைப் பாராட்டில் தமிழரசிக்கும் பங்கு உண்டு. அதனால்தான் அவரை உங்களிடம் முதல்வர் ஒப்படைத்திருக்கிறார். கீழடி அகழாய்வின் அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுத்து. திருத்தி எழுதி அனுப்பச் சொல்கிறது. இந்துத்வா அரசான மோடி அரசு தமிழரின் தொன்மையை கூறினால் சமஸ்கிருதத்தை விட தமிழரின் தொன்மையும் பெருமையும் உயர்ந்து விடுமே என்பதால் இப்படிச் செய்கின்றனர். இந்த பாஜவுடன்தான் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. பாஜவுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பது அதிமுகவுக்கு தெரியவில்லை. முதல்வராக இருந்த நிதிஷ் குமார் பதவி பறிக்கப்பட்டு இன்று ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.
எடப்பாடியையும் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னர் வேலை பார்க்க சொல்வார்கள். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்ததாக எடப்பாடி சொல்கிறார். உங்கள் அறிக்கையை மக்கள் யாரும் பார்க்கவே இல்லை. ஆனால் திமுக தலைவர் கலைஞர் கூறிய உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வார்த்தையை நீங்கள் தான் உங்கள் தேர்தல் அறிக்கையின் பத்தாவது பக்கத்தில் காப்பி அடித்து சேர்த்து இருக்கிறீர்கள். எப்படியோ தலைவர் கலைஞரால் வாழ்கிறீர்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு வாக்களிக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி நடத்துறார். மீண்டும் திமுக ஆட்சி நிச்சயம் அமையும். இவ்வாறு பேசினார்.
* திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்: அதிமுக வேட்பாளர் மிரட்டல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகரில் திருக்கோவிலூர் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வேட்பாளரை ஆதரித்து பேசினர். இறுதியாக அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டைதொகுதி அதிமுக வேட்பாளருமான முன்னாள் எம்எல்ஏ குமரகுரு பேசினார். அப்போது, அதிமுக நிர்வாகிகள் அல்லது தொண்டர்கள் யாராவது திமுகவினருடன் ரகசியமாக பேசுவது எனக்குத் தெரிந்தால், நானே நேரடியாக அந்த ஏரியாவுக்கு வருவேன். அப்படி அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்களின் கையை உடைப்பேன், கையை வெட்டுவேன் என்று மிரட்டல் தொனியில் பேசினார்.
குமரகுருவின் இந்த மிரட்டல் பேச்சை கேட்டதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னப்பா.. இந்த மனுஷன் சினிமா படத்தில் வருவதுபோல பெரிய ரவுடியா பார்ம் ஆயிட்டாரோ? சினிமா வில்லன்களை எல்லாம் மிஞ்சி விட்டாரே… என நையாண்டியாகவும், நக்கலாகவும் கலாய்த்து வருகின்றனர். சினிமா படத்தில் வடிவேலு அட்ரஸ் கேட்டு மிரட்டுவது போல, குமரகுருவும் நீ வேணும்னா என் ஏரியாவுக்கு வாடா என்று கூப்பிடுவது போல.. நான் ஏரியாவுக்கே வருவேன் என எகிறியது சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் தெறிக்கின்றன.
