விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர் ராஜவர்மன் பேசியதாவது: திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் சத்தியமாக சீட் கேட்கவில்லை. எடப்பாடிதான் என்னை திருச்சுழி தொகுதிக்கு போட்டியிட அனுப்பி வைத்தார். நான் ஏற்கனவே சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவன். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்ளாட்சி தேர்தலில் 20 அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களை ஜெயிக்க வைத்தேன். அதேபோல் திருச்சுழி தொகுதியிலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிர்வாகிகளை ஜெயிக்க வைப்பேன்.
திருச்சுழி தொகுதியில் உள்ள 292 கிளை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் தேவையான உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தேர்தல் வேலைகளை சுறுசுறுப்பாக பாருங்கள். நான் ஏற்கனவே சாத்தூர் எம்எல்ஏவாக இருந்த காரணத்தால் தேர்தல் வேலைகள் எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன். தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலோ, நிர்வாகிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தாலோ நான் முடிவு எடுக்க தயங்கமாட்டேன். ஆவியூரை சேர்ந்த ஒருவர் விஜய் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். விஜய் கட்சிக்கு போடும் ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள். நான் வெற்றி பெற்றால் உங்களுக்காக பாடுபடுவேன். இவ்வாறு கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தீவிர தேர்தல் பணியாற்றி வந்தார். ஆனால் அதிமுக கூட்டணியில் சாத்தூர் தொகுதி பாஜ மாநில தலைவர் நயினாருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த ராஜவர்மன், சசிகலா கட்சியில் இணைந்து சாத்தூரில் களமிறங்க போவதாக தகவல் பரவியது. சாத்தூரில் செல்வாக்குள்ள ராஜவர்மன், அங்கு போட்டியிட்டால் நயினார் நாகேந்திரன் ேதால்வி உறுதி. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுக, பாஜ தலைமை ராஜவர்மனை சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதன்பின்னரே எடப்பாடி நிர்பந்தத்தால் திருச்சுழியில் ராஜவர்மன் போட்டியிடுவதாக ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ‘அண்டர்கிரவுண்ட் டீலிங்கை’ ராஜவர்மனே வெளிப்படையாக ஒப்புக் கொண்டதால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
