அரியலூர் மாவட்டம் குமுளூரை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா. இவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1167 மதிப்பெண் பெற்றதுடன் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டார். இதற்காக 2017ம் ஆண்டு நீட் தேர்வை எழுதிய மாணவி அனிதா தோல்வியடைந்தார். இதனால் டாக்டராக வேண்டும் என்ற கனவு சிதைந்து போனதால் அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் அனிதாவின் வீட்டுக்கு வந்து அவரது தந்தை ஆறுமுகத்திடம் ஆறுதல் கூறி சென்றனர். இதே போல் நடிகர் விஜய்யும் அனிதாவின் வீட்டுக்கு வந்து அவரது தந்தைக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கினார். மேலும் நீட் தேர்வுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தவெகவை துவங்கிய விஜய், சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் கடந்த 30ம்தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டியில் செயல்படும் கோகிலாம்பாள் அறக்கட்டளைக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்காக ரூ.20 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக விஜய் குறிப்பிட்டிருந்தார். தற்போது போகிற இடமெல்லாம் நீட் தேர்வு ரத்து செய்யாதது ஏன் என்று திமுகவை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்.
ஆனால், திமுக கொடுத்த வாக்குறுதி மத்தியிலும், மாநிலத்திலும் இந்தியா கூட்டணி ஆட்சி வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வோம் என தெரிவித்திருந்தது. ஆனால், மத்தியில் பாஜ ஆட்சி வந்ததால் அது செய்ய முடியவில்லை. இருந்தும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு அனுப்பியும் இதுவரை பதில் சொல்லாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆனால், இதை பற்றி இதுவரை கேள்வி கேட்காத விஜய், பயிற்சி மையத்துக்கு ரூ. 20 கோடி கொடுத்து நீட் தேர்வுக்கு ஆதரவளித்துவிட்டு, வெளியில் நாடகமாடுவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
* சொந்த கட்சியினரே எதிர்ப்பு, போராட்டம்: தனி ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர் சத்திய குமாருக்கு சோதனை
திருத்தணி தொகுதி தவெக வேட்பாளராக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சத்திய குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு திருத்தணிக்கு வருகை தந்தபோது நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் சத்திய குமார் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்ய சென்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திருத்தணியில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கட்சி நிர்வாகிகளை மதிக்க தெரியாமல் கொச்சைப்படுத்தி பேசும் வெளியூர் வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும், உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வேட்பாளருடன் செல்லாமல் புறக்கணித்தனர். இதனால், நேற்று மதியம் 2 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தனி ஆளாக வந்த சத்திய குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் தனி நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
